உள்நாடு

நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு மே 2ஆவது வாரத்தில் 2ஆவது பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பம்

மே 2ஆவது வாரத்தில் 2ஆவது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. அதேபோல் வருகிற ஜூலை 15-ந் தேதி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது.

இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பயண கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கப்பல் பயணிகளுக்கு உதவிடும் வகையில் தற்போதைய கட்டணமான ரூ.8,500-ல் இருந்து ரூ. 8000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்களது உடைமைகளாக 10 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை 7 கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்க உள்ளோம்.

இது தவிர ரூ.15,000-க்கு 2 இரவுகள் பயணம் உட்பட மூன்று நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம், ரூ.30,000-க்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாக பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேக்கேஜ் திட்டத்தில் இருவழி பயண கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படும்.

அதேபோல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற ஜூலை 15-ந் தேதி வாக்கில் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

அதுபோல் மே 2-வது வாரத்தில் 2-வது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 250 இருக்கைகளில், 220 எக்கனாமிக் இருக்கைகளும், 20 பிசினஸ் இருக்கைகளும், 10 சூட் ரூம்கள் வசதியும் இருக்கும். வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால் இந்த 2-வது கப்பல் போக்குவரத்தானது புயல் சின்னம் உருவாகும் காலத்தை தவிர்த்து, ஆண்டு முழுவதும் மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் வகையுடன் கூடிய தரத்தில் உருவாக்கி வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *