உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதியொதுக்கீடுகளை, அபிவிருத்தித் திட்டங்களை அனுர உட்பட எவருக்கும் தடுக்க முடியாது; ஐ.ம.சக்தி அத்தனகலை அமைப்பாளர் சந்திரசோம சரணலால்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும்கட்சி சரிவுகளைச் சந்தித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் வென்றெடுக்கும் சபைகளுக்கு நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாதென ஜனாதிபதியும் அமைச்சர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர்.
இதனை எந்த வகையிலும் ஏற்க முடியாதென அத்தனகலை தேர்தல் தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் சந்திரசோம சரணலால் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் காரியாலயத்தை நேற்றிரவு கஹட்டோவிட்டவில் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கஹட்டோவிட்ட வட்டார வேட்பாளர் அரபாத்தின் வெற்றிக்கு சகலரும் கட்சி,நிற பேதமின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, மக்களின் வரிப் பணத்திலேய உள்ளூராட்சி சபைகள் இயங்குகின்றன.ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சிகள் சபைகளை வெல்லும் பட்சத்தில் நிதியொதுக்கீடுகள், அபிவிருத்தித் திட்டங்களை ஜனாதிபதி அனுர அல்ல எவருக்கும் தடுக்க முடியாது.
தோல்வியின் பயத்தில் ஆளும் கட்சியினர் இவ்வாறு சொல்லும் பொய்களை நம்ப வேண்டாம். எந்த வித தயக்கமும் இன்றி 6 ஆம் திகதி காலையிலேயே சென்று தொலைபேசிக்கு வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.