உள்நாடு

இரத்தினபுரியில் டெங்கு தீவிரம்

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தொற்று தீவிரமடைந்து வருவதாக அறிய கிடைத்ததையடுத்து அதை கட்டுப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் குறித்து இன்று (29) சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிடத் தொகுதியில் இருந்து டெங்கு தொற்று பரவி உள்ளதன் காரணத்தால் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட சேவையார்கள் அதிகமானோருக்கு டெங்கு தொற்று பரவி உள்ளது.

இதை கருத்தில் கொண்டு முதலில் மேற்படி வைத்தியசாலை வளாகத்தில் விரைவில் டெங்கு தொற்றை ஒழிப்பதற்காக குருவிட்ட இராணுவ முகாமில் இருந்து 80 இராணுவத்தினரை அழைத்து அவர்களின் உதவியுடன் கடந்த 26 ஆம் திகதி இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் சுற்று சூழல் முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாம் இராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்தவுடன் இராணுவத்தினர் விரைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கப்பட்டதையிட்டு இராணுவத்தினருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் பாடசாலைகள் மற்றும் கிராமப்புறங்கள், நகர்புறங்கள், தோட்டப் புறங்களிளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அதிகமான தாதியர்களுக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணத்தால் மேற்படி வைத்தியசாலையில் பயிற்சியை நிறைவு செய்த தாதியர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளன.

பொது மக்களிடம் நாம் அன்புடன் கேட்டு கொள்ளும் விடயமானது தத்தமது, இல்லங்களின் சுற்று சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுங்கள்.

தத்தமது பிள்ளைகளை பாதுகாக்க நாம் இதை செய்ய வேண்டும். டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்வோம் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *