முன்மாதிரியான சபையாக நாவிதன்வெளி பிரதேச சபையினை மாற்றியமைப்போம்: கால்பந்து சின்ன சுயேட்சை வேட்பாளர் எம்.ஏ.நளீர் தெரிவிப்பு.
நாவிதன்வெளி பிரதேசத்தில் வாழும் மூவின மக்களுக்கும் பாரபட்சம் இன்றி சேவை செய்து ஏனைய சபைகளுக்கு முன்மாதிரியான சபையாக நாவிதன்வெளி பிரதேச சபையினை மாற்றியமைப்போம் என கால்பந்து சின்ன சுயேட்சை வேட்பாளர் எம்.ஏ.நளீர் தெரிவித்தார்.
வேட்பாளர் வாஜித் தலைமையில் ஐந்தாம் கிராமம் சாளம்பைக்கேணி மத்தி வட்டாரத்தில் கால்பந்து சின்னம் சுயேட்சை வேட்பாளர் சுபைதீன் அவர்களை ஆதரித்து அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இதனை தெரிவித்தார்.
இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில்..
கடந்த காலங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இத் தேர்தலின் மூலம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் சில கட்சி அரசியல்வாதிகள் மக்களின் அபிவிருத்தி திட்டங்களுக்காக வழங்கப்படுகின்ற நிதியில் மோசடிகள் செய்து அவர்களின் பைகளை நிரப்புகின்ற சந்தர்ப்பங்களும் அதிகம் காணப்பட்டதை நாம் அறிவோம்.இவ்வாறான ஊழல்வாதிகளை விரட்டியடிப்பதற்காக நாங்கள் எவ்வித கட்சியும் சாராமல் இத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்றோம். இதன் மூலம் மக்களுக்கு பல்வேறு பட்ட சேவைகளை வழங்கி ஏனைய சபைகளுக்கு ஓர் முன்மாதிரியான சபையாக நாவிதன்வெளி பிரதேச சபையை மாற்றியமைப்போம் எனத் தெரிவித்தார்.
மேலும் நாங்கள் கடந்த காலங்களில் பல கிராமங்களுக்கு பல்வேறு பட்ட சேவைகளை செய்து காட்டியுள்ளோம். தனிப்பட்ட ரீதியாக பல்வேறு பட்ட நாடுகளின் நிறுவனத் தலைவர் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்து உரையாடி அவர்களின் நிதிப்பங்களிப்பின் ஊடாக கிராம மக்களுக்கு பல உதவித் திட்டங்கள் எமது அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அது மட்டுமல்ல ஒரு அரசியல்வாதியால் கூட செய்ய முடியாத வேலைத்திட்டங்களை கூட நாங்கள் செய்திருக்கின்றோம்.இக்கிராம மக்கள் ஒன்று மட்டும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று எமக்கு கிடைக்கும் அதிகாரத்தின் ஊடாக அச்சமின்றி மக்களின் உரிமைக்காக செயற்பட முடியும் என்பதோடு எமக்கு கிடைக்கப்பெறும் சம்பளப் பணத்தினை கூட முழுமையாக மக்களின் நலனுக்காகவே பயன்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கால்பந்து சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் நாங்கள் அமோக வெற்றி பெறுவது நிச்சயம். இருப்பினும் வட்டாரத்தை வென்றெடுப்பதற்காக இக்கிராம மக்கள் பெறுமதியான தங்களின் வாக்குகளின் ஊடாக எங்களை ஆதரிக்க வேண்டும் எனவும் கால்பந்து சின்னம் சுயேட்சை தலைமை வேட்பாளர் எம்.ஏ.நளீர் இதன்போது வேண்டிக்கொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சுபைதீன் மற்றும் கால்பந்து சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






(ஏ.எச்.எம்.ஹாரீஸ்)