பஸ்,லொறி, மோட்டார் சைக்கிள் மோதலில் 10 பேர் காயம்..! மிஹிந்துபுர பகுதியில் சம்பவம்..!
எப்பாவல கெக்கிராவ பிரதான வீதியில் மிஹிந்துபுர பகுதியில் இன்று (28) மாலை 4.30 மணியளவில் தனியார் பஸ்,பொலேரா ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்து எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பஸ் சாரதியின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற ஓட்டுதலே விபத்திற்கான காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கல்நேவயில் இருந்து அனுராதபுரம் நோக்கி அதிக வேகத்தில் பயணித்த தனியார் பஸ் முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிர்திசையில் நேருக்கு நேர் வந்து கொண்டிருந்த பொலேரோ ரக லொறியுடன் மோதியுள்ளது. அதே நேரத்தில் லொறியின் பின்னால் வந்த ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தின் விளைவாக தனியார் பஸ் ,லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதத்திற்குள்ளாகியுள்ளன.
எப்பாவல அழுத்வெவ பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு பொலன்னறுவை மெதிரிகிரிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த லொறியில் பயணித்த குழுவைச் சேர்ந்த 09 பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் காயமடைந்து எப்பாவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.
விபத்தின் பின்னர் பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி எப்பாவல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

