உலக இஸ்லாமிய மாநாட்டில் ஜெஸ்மி எம்.மூஸாவின் நூல் வெளியீடு!
இலக்கிய விமர்சகரும் ஆய்வாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஜெஸ்மி எம்.மூஸா தமிழ்நாடு திருச்சியில் நடைபெறவுள்ள இஸ்லாமிய இலக்கிய கழக உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா மாநாட்டில் இலங்கைசார் ஆய்வாளராக கலந்து கொள்ளவுள்ளார்.
தமிழ்நாடு திருச்சி எம்.ஐ. ஈ.டீ பொறியியல் கல்லூரியில் எதிர்வரும் மே 9,10,11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மாநாட்டின் ஓர் அங்கமாக ஜெஸ்மி எம். மூஸாவின் “அஷ்ரஃப் எனும் இலக்கியம்” ஓர் ஆய்வுக் கண்ணோட்டம் எனும் நூல் வெளியிடப்படவுள்ளது.எம்.எச்.எம்.அஷ்ரஃப் பற்றிய இலக்கிய வாழ்வியலுடன் தொடர்பான முடிச்சுக்களை அவிழ்த்து விடும் இந்நூால் அவரது கவிதைகள்,சிறுகதைகள், சிறுவர் பாடல்கள்,இசைப்பாடல்களின் சமூகத் தாக்கம் ஆகியவற்றின் ஆழமான ஆய்வாக வெளிக்கொணர்கிறது.
கலாநிதி பட்டப்படிப்பிற்கான “பெண் மொழி அரசியல் கிழக்கிலங்கை முஸ்லிம் பெண் கவிஞர்களின் கவிதைகள் ஓர் இஸ்லாமிய நோக்கு” என்ற.ஆய்வுக் கட்டுரையும் ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்திய விதை வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் “தமிழோடு உறவாடு” இலக்கியச் சந்திப்பிலும் ஜெஸ்மி எம்.மூஸா பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச ஆய்வு மாநாடுகள் மற்றும் ஆய்விதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் பலவற்றை சமர்ப்பித்துள்ள தமிழ் துறை முதுகலைதத்துவமாணியான ஜெஸ்மி எம்.மூஸா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி ஆய்வினை மேற்கொண்டு வருவதோடு
கல்முனை கல்வி வலயத்தின் தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றுகின்றார்.
இருவார காலம் இந்தியாவில் தங்கியுள்ள இவர் தமிழ் நாட்டின் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(நிஸா இஸ்மாயீல் )