“ஓட்டமாவடி சபையின் ஆட்சியைப் பெற்றுத் தந்தால் பெரிய பரிசு காத்திருக்கிறது..!” – ரவூப் ஹக்கீம்
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஓட்டமாவடி பிரதேச சபையில் எமக்கு கூடுதலான ஆசனங்கள் கிடைத்தும் ஆட்சி அமைக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. எங்களது கட்சியில் போட்டியிட்டவர் மாறிப்போனதால் ஆட்சி கை நழுவிப் போனது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபைக்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு (24) ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்,
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் நீங்கள் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியைப் பெற்றுத் தந்தால் அதற்கான பெரிய பரிசு காத்திருக்கிறது.
அதை நீங்கள் பெற்றுத் தரவேண்டும். அதன் மூலம் இந்தப் பிரதேசத்தை நான் கண்ணியப்படுத்தி, கௌரவப்படுத்த வேண்டும் எனும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம் காங்கிரசுக்கு அளித்த வாக்குகளால்தான் எங்களுக்கு மேலதிகமாக ஒரு ஆசனம் கிட்டியது.
அந்த ஆசனத்தை சுழற்சி முறையில் பங்கிடுவது என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அபிமானம், மீளக் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது எனும் விவகாரத்தை நீங்கள் உரத்துச் சொல்ல வேண்டும் என்று ரவூப் ஹகீம் தெரிவித்தார்.
கல்குடாவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை வழங்குவது தொடர்பாகவே பெரிய பரிசு காத்திருக்கிறது என்று ரவூப் ஹகீம் மக்கள் மத்தியில் கூறியமை குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம்.பர்ஸான்)