உள்நாடு

பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் அநீதியா?அமைச்சுக்கு அறிவியுங்கள்; பிரதமர் ஹரிணி

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள் நடந்தால், தயவுசெய்து அமைச்சுக்கு அறிவியுங்கள் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தொடங்கொட பகுதியில் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:

ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சமூகத்தை மேம்படுத்த நாம் பாடுபடுகையில், தவறுகளைச் சரிசெய்து முறைமையை மாற்ற மக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தலையிடுகிறார்கள். இதுதான் நாம் எதிர்பார்த்த மாற்றம். இதுதான் ஜனநாயகம் என்பது. இப்போது, முன்னர் போன்று போலீசில் முறைப்பாடு அளிக்கச் சென்று திட்டுதல்களை நான் கேட்க வேண்டியதில்லை. கவனமாகக் கேட்டு, முறைப்பாடுகள் சரியாக பதிவுசெய்யப்படுகின்றன. சுமுகமாக உரையாடுகின்றார்கள், இதுதான் மக்கள் கேட்கும் மாற்றம்.

இந்த நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை ஒரு பிள்ளையை பாடசாலையில் சேர்ப்பதுதான். சில காலமாகவே வழக்கத்தில் இருந்தது போல, மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்க்க அரசியல்வாதிகளிடமிருந்து கடிதங்களைப் பெற வரிசையில் நின்றார்கள். அப்படித் தான் பிள்ளைகள் பாடசாலையில் சேர்க்கப்பட்டனர், அந்த முறையை நாங்கள் மாற்றினோம். கடிதம் கேட்பது தவறு என்று இன்று மக்கள் எங்களிடம் கூறுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அந்தத் தவறு நடப்பதை பார்க்க அவர்கள் விரும்பவில்லை. இங்கு வருபவர்கள் கவலையில் அழுகிறார்கள், சில விடயங்களை கேட்கின்ற போது எனக்கும் அழுகை வருகின்றது.

ஆனால் அவர்களில் யாரும் என்னிடம் எந்தத் தவறையும் செய்யச் சொல்லவில்லை. தனிப்பட்ட விடயங்களுக்காக அரசியல்வாதிகளிடமிருந்து நன்மைகளை எதிர்பார்ப்பது தவறு என்று மக்களே கூறுகிறார்கள். எங்களிடம் வந்து தங்கள் துக்கத்தையோ அல்லது அழுகையையோ வெளிப்படுத்தும்போது கூட, அரசியல்வாதிகளிடம் உதவி கேட்காமல் இருப்பதற்குப் பழக்கமாகிவிட்டார்கள் என்றால், நாங்கள் மாறவில்லையா? மக்கள் மாறவில்லையா? இதைத்தான் இந்த நாட்டு மக்கள் கேட்டார்கள்.

இந்தப் புதிய அரசியல் கலாசாரம் ஒவ்வொரு மட்டத்திலும் ஏற்பட வேண்டும். அந்த மாற்றம் ஜனாதிபதி, பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிகழ வேண்டும். அப்படியில்லை என்றால், இதைச் செய்ய முடியாது.

சில உள்ளூராட்சி நிறுவனங்கள் இருப்பது குறித்தும், அந்த நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பொதுமக்களுக்குத் தெரியாது என்றும், அதற்கான காரணம், அத்தகைய நிறுவனம் இருப்பது குறித்தோ அல்லது ஏதேனும் சேவை வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தோ எந்த அறிவும் இல்லாததே என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *