“முஸ்லிம்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம்” -இம்ரான் எம்.பி
முஸ்லிம் மக்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று(25/4/25) வெள்ளிக்கிழமைஇடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
இந்த அரசாங்கம் இஸ்ரேலைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் மீது அடக்கு முறைகளைப் பிரயோகித்து வருகின்றது. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர் ருஸ்தியை பயங்கவரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தமை இதற்கு நல்ல உதாரணமாகும்.
இஸ்ரேலியர்கள் இலங்கையில் அவர்களது சமயத்தலங்கைளை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள அரசாங்கம் அதற்கு அரச பாதுகாப்பை வழங்கி வருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இது தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது சரியான பதில் கொடுக்க முடியாது அரசாங்கம் மழுப்பிய விடயம் நம் அனைவருக்கும் தெரியும்.
பொத்துவில் அருகம்பேயில் யூதர்கள் பாலர் பாடசாலை நடத்த அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு அதற்காக 5க்கும் மேற்பட்டோருக்கு நீண்ட நாள் விசா வழங்கி வருகின்றது. இதனால் அவர்கள் நிரந்தரமாக இங்கு தங்கி உள்ளார்கள். இவர்களது பாதுகாப்பைக் காரணம் காட்டித் தான் பொத்துவில் பகுதியில் முஸ்லிம்கள் சிலர் கைது செய்யப்பட்டமை அனைவருக்கும் நினைவில் இருக்கும்.
அருகம்பே பகுதியில் பாலர் பாடசால நடத்துகிறோம் என்ற போர்வையில் யூதர்கள் நிரந்தரமாக ஏன் தங்கி உள்ளார்கள் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இங்கிருந்து முஸ்லிம்களுக்கெதிரான சதித் திட்டம் ஏதும் தீட்டப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது
இலங்கையில் உள்ள சட்டத்தின்படி தனியார் எவரும் இலங்கை பாடத்திட்டத்தைப் போதிக்கின்ற தனியார் பாடசாலை நடத்த முடியாது. ஆனால் அருகம்பேயில் பாலர் பாடசாலை நடத்த யூதர்களுக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இஸ்ரேலியர்கள் என்றால் சட்டதிட்டம் பார்க்கப்படாது என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.
இந்த அரசாங்கம் இஸ்ரேலர்களைப் போசித்து பராமரிக்கும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக அடக்கு முறைகளைப் பிரயோகித்து வருகின்றது என்பதை நாம் இவற்றிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகின்றது.
எனவே இந்த அரசாங்கத்துக்கு வாக்களிப்பதானது முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்