இந்தியாவுக்கெதிராக பாகிஸ்தானின் அதிரடி தீர்மானங்கள்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தண்டனை நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு (NSC) எதிர் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய அறிவிப்புகள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.
தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. ந்தியாவுடனான எல்லை மூடப்படுவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியா உடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.
மூன்றாவது நாடுகள் வழியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் உட்பட நிறுத்தி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து இன்று பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.
இந்நிலையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நதி நீரை நிறுத்தியது போர் நடவடிக்கை ஆகும் எனவும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் இந்திய நாட்டினருக்கு வழங்கப்படும் அனைத்து விசாக்களையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது.
பாகிஸ்தானில் தற்போது உள்ள இந்திய நாட்டினர் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் எண்ணிக்கை இந்த மாதம் 30 ஆம் திகதி முதல் 30 இராஜதந்திரிகள் மற்றும் ஊழியர்களாகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
