மறைந்த பாப்பரசர் ஒப்பற்ற தார்மீக மரபை விட்டுச் சென்றுள்ளார்; ஸ்ரீ .மு . கா தலைவர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்
தற்காலத்தில் உலகளாவிய ரீதியில் பெரிதும் செல்வாக்குமிக்கவராக மதிக்கப்பட்ட பரிசுத்தப் பாப்பரசர் பிரான்சிஸ் ஒப்பற்றதொரு தார்மீக மரபை விட்டுச் சென்றுள்ளதாகவும், அன்னாரின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலையடைவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மறைந்த பாப்பரசர், இவ்வுலகில் வாழும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான கத்தோலிக்கர்களைக் கவர்ந்து ஈர்த்த ஆளுமை மிக்க ஆன்மீகத் தலைவராகத் திகழ்ந்தார் .நீண்ட வரலாற்றைக் கொண்ட பாரம்பரியத்தில், ஐரோப்பியரல்லாத , லத்தீன் அமெரிக்கர் ஒருவரான
அவரது பயணப் பாதையில்
அடிமட்ட சமூகத்தவர்களுடன் அவர் பேணிவந்த அன்புத் தொடர்பு, வறுமை பற்றி அவருக்கு இருந்த ஆழமான புரிதல் மற்றும் இளமை தொட்டே அன்னார் கடைப்பிடித்தொழுகிய
தன்னலமற்ற வாழ்க்கை நெறி ஆகியவற்றால் நன்கு புடம் போடப்பட்டிருந்தார்.பாவத்தில் உழன்ற மக்களைப் பற்றி அவர் பச்சாதாபப்பட்டார்.
பலஸ்தீனத்தில் காசாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள பேரழிவு
மற்றும் காலநிலை மாற்றத்தினால் நிகழ்ந்து வரும் நெருக்கடி நிலைமைகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி அவர் கரிசனை கொண்டிருந்தது மட்டுமல்ல, மறைவதற்கு முந்திய நாள் உயிர்த்த ஞாயிறன்று
கூட, காசாவிலும் உலகெங்கிலும் அமைதிக்காக அழைப்பு விடுத்திருந்தார்.
முன்னதாக, காசாவில் இஸ்ரேலின் இராணுவக் கெடுபிடிகளின் படுமோசமான விளைவுகளை “இனப்படுகொலை” என அவர் கண்டித்திருந்தார். அந்த பரிதாப நிலைமையின் தீவிரத் தன்மையை அவர் சுட்டிக்காட்டி,குறிப்பாக அப்பாவி பச்சிளம் பாலகர்கள் மீது மேற்கொள்ளப்படும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை ஈவிரக்கமற்ற படுபாதகச் செயல்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
பாலஸ்தீன மக்கள் அனுபவிக்கும் துன்ப , துயரங்கள் மீது பலம் வாய்ந்த நாடுகள் கடைப்பிடிக்கும் அலட்சியப் போக்கையிட்டு
அன்னார் கவலைடைந்திருந்தார். குண்டுவெடிப்புகளால் பல்வேறு விதங்களிலும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி விசாரித்தறிவதற்கு அவர் கடந்த சில மாதங்களாக அடிக்கடி காசாவில் உள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தாகவும் கூறப்படுகின்றது.
அவரது மனிதாபிமான பார்வை கத்தோலிக்கர்கள் மீதும் கத்தோலிக்கர் அல்லாதவர்கள் மீதும் ஒரு சேர படர்ந்திருந்தது.
மோதல்கள்உக்கிரமடைந்துள்ள- மக்கள் வறுமையால் வாடுகின்ற பல ஆசிய ,ஆபிரிக்க ,ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அவர் நிலைமைகளை நேரில்
அவதானித்திருந்தார் .
சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில்,இவ்வுலகைவிட்டுப் பிரிந்துள்ள பரிசுத்த பாப்பரசர் அவர்களின்
மறைவுத் துயரில் நாங்களும் பங்கேற்கின்றோம் என்றுள்ளது.