ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆய்வு செய்ய விசேட குழு
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 67,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஆய்வுசெய்ய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவின் தலைமையில் நால்வர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.
மேலும், இந்த குழு பிரதான குழுவாக செயற்படும் என்பதுடன் இதனுடன் இணைந்த வகையில் மேலும் சில உபக் குழுக்களும் நியமிக்கப் பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் பொலிஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பொலிஸ் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவின் தலைமைத்துவத்தில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விசேட குழு நான்கு உறுப்பினர்களை கொண்டது என்பதுடன் இந்த குழுவினூடாக மேலும் உபக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. அந்த உபக்குழுக்களினூடாக இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. அறிக்கை தொடர்பான ஆய்வுகளின் பின்னர், இதனூடாக உருவாகும் புதிய விடயங்கள் தொடர்பில் புதிதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். இந்த ஆணைக்குழு அறிக்கை 66,000 – 67,000 பக்கங்களை கொண்டதாகும்.
அதற்கமைய, தற்போது நியமிக்கப்பட்டு பிரதான குழு மற்றும் ஏனைய உபக்குழுக்களினூடாக இந்த அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மிக குறுகிய காலத்தில் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து அந்த விசாரணைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க பொலிஸ் திணைக்களத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.