இன்று ஆட்சி செய்வது மக்களின் இறையாண்மையோ அல்லது நாட்டின் சட்டமோ அல்ல, மாறாக T56, தோட்டாக்கள் மற்றும் குண்டுகளே ஆளுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இன்று பாதுகாப்பே இல்லாத நாட்டில் நாம் வாழ்ந்து வருகிறோம். சட்டத்தின் ஆட்சி கோலோச்சாது காட்டுச் சட்டமே கோலோச்சி, போட்டிக்கு கொலை செய்யும் கலாசாரம் தலைதூக்கி காணப்படுகின்றது. திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் இன்று சமூகத்தை ஆட்கொண்டுள்ளன. வீட்டுக்குள் நுழைந்து சுடும் நிலைக்கு நாடு வந்துள்ளது. சுதந்திர நாடாக அமைந்து காணப்பட்டாலும், மக்களுக்கு சுதந்திரம் இல்லை. அனைவரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று ஆட்சி செய்வது மக்களின் இறையாண்மையோ அல்லது நாட்டின் சட்டமோ அல்ல, மாறாக T56, தோட்டாக்கள் மற்றும் குண்டுகளே ஆளுகின்றன. மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு சட்டத்தை அமுல்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. குழந்தைகள் முன்னிலையில் கூட கொலைகள் இடம்பெறும் நிலைக்கு நாடு வந்துள்ளது. கொலைகள் சாதாரணமாகிவிட்டன. இந்த விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பும் போது, திசைகாட்டியின் கருத்துப் படி இது தேசிய பாதுகாப்பை பாதிக்காது என்று அரசாங்கம் கூறுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அகலவத்தை பிரதேசத்தில் இன்று (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கொலைக் கலாச்சாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், இதனை இல்லாதொழிக்கவும் இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை, முதுகெலும்பும் இல்லை. பெண்கள், குழந்தைகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் கூட இறந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது வீதிகளில் அல்ல வீட்டிலும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவர்கள் பெண்கள் கூட பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றனர். தேசிய பாதுகாப்பு தொடர்பில் டியுஷன் எடுக்க முடியும் என கூறிய அரசாங்கத்தினால் கூட நாட்டு மக்களை பாதுகாக்க முடியாதுபோயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சமூகத்தில் பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் என்ன தீர்வுகளை வைத்திருக்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு கேள்வி எழுப்பினார்.






