டேன் பிரியசாத் கொலை; மூவர் கைது
சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக 06 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பாதாள உலக குழுவின் தலைவரும் போதைப்பொருள் வர்த்தகரும் என கருதப்படும் கஞ்சிபானை இம்ரானுடன் தொடர்புடையவர்கள் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
சாலமுல்ல பகுதியிலுள்ள லக்சந்த செவன தொடர்மாடி வீட்டுத் தொகுதியின் 06 ஆவது மாடியில் நேற்று இரவு இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின்போது, மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 39 வயதுடைய அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
சமூக ஆர்வலரான டேன் பிரியசாத், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொலன்னாவை நகரசபைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.