உள்நாடு

பேருவளை நகர சபையின் சகல வட்டாரங்களையும் ஐ.ம.சக்தி வெல்லும்; வேட்பாளர் சியாம் முனவ்வர

பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினர் சியான் முனவ்வர் பேருவளை நகர சபைக்கான தேர்தலில் சீனங்கோட்டை அக்கரகொடை வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தொலைபேசி சின்னத்தில் மீண்டும் போட்டியிடுகிறார்.
பேருவளை நகரசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடுவதால் சியான் முன்னவ்வருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

பேருவளை நகரசபை உறுப்பினராக பதவி வகித்த இவர் இப்பகுதியின் அபிவிருத்திக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் தன்னாலான பங்களிப்பைச் செய்துள்ளார்.
நகரசபை உறுப்பினர் பதவிக்கு கிடைக்கும் மாதாந்த சம்பளத்தை பிரதேச பாடசாலையில் கல்வி பயிலும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான செலவு செய்து மக்களின் நன்மதிப்பினை பெற்றுக்கொண்டார்.

அக்கரகொடை வட்டாரத்திலிருந்து இவரை இம் முறையும் அமோக வாக்குகளினால் தெரிவு செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலான விசேட சந்திப்பொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் முக்கியஸ்தர்களின் பங்குபற்றலுடன் அக்கரகொடை நளீம் ஹாஜியார் மாவத்தையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சியான் முனவ்வர் கூறியதாவது,
பேருவளை நகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே வெற்றி வாய்ப்புள்ளன. நூம் ஒன்பது வட்டாரங்களையும் மிக இலகுவாக வெற்றிகொள்வோம்.
அக்கரகொடை வட்டார வாழ் மக்கள் எனது வெற்றிக்கா வாக்களிக்க தீர்மானித்துவிட்டனர்.

இந்த வட்டார மக்கள் என்னுடனேயே உள்ளனர்.
நான் மக்களுக்கு முடியுமான சேவைகளை பெற்றுக்கொடுத்தேன். மக்கள் சேவைக்காக எனது வீட்டின் கதவு 24 மணிநேரமும் திறந்தே இருக்கும். நான் இரவு பகல் பாராது மக்களின் விமோஷனத்திற்காக பணி செய்துள்ளேன்.

விஷேடமாக ஊரின் கல்வி முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் உழைத்துள்ளேன். எனவே நடைபெறவுள்ள தேர்தலில் எனது வெற்றிக்காக இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், கல்விமான்கள், இரத்தினகல் வர்த்தகர்கள், அரச, தனியார்துறை ஊழியர்கள், சமூக நல இயக்கங்களின் உறுப்பினர்கள் பெரும் பங்களிப்புச் செய்வதனால் இம் முறையும் வெற்றியீட்டுவேன்.

அந்த வெற்றியினூடாக இந்த வட்டார மக்களுக்கு மாத்திரமின்றி சகலருக்கும் சேவையை பெற்றுக்கொடுப்பேன்.
பேருவளை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் இப்திகார் ஜெமீல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னால் எம்பியுமான அஸ்லம் ஹாஜியார் எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் வழிகாட்டலுடன் மக்கள் பணிகளை தொடர்வேன்.
எனவே நகர சபையின் நிர்வாகத்தை பேருவளை மக்கள் ஒன்றினைந்து ஐக்கியமக்கள் சக்தியிடம் ஒப்படைக்க முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

(பேருவளை பி.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *