ஈஸ்டர் தாக்குதல்.ஜனாதிபதியின் அறிவிப்பை எதிர்பார்த்திருக்கிறோம். முஜிபுர் ரஹ்மான் எம்.பீ.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதிஅநுரகுமார திஸாநாயக்க இன்று வெளியிடவுள்ள விசேட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றோம். இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சாரா ஜெஸ்மின் மற்றும் சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை குறித்த தகவல்களையும் அரசாங்கம் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கான உண்மை காரணியை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டனர். இது சஹ்ரானால் மேற்கொள்ளப்பட்ட மிக் மோசமான பயங்கரவாதத் தாக்குதல் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோன்று சஹ்ரானுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஒரு இருந்தது என்பதையும் இன்று முழு நாடும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
அதற்கமைய சஹ்ரானுக்கு அரசியல் ரீதியாகவும், ஏனைய வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கியவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதே தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதியாகும். 21ஆம் திகதி இது குறித்து விசேட அறிவிப்பொன்று வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பிற்காகவே நாமும் காத்திருக்கின்றோம். இந்த தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் சிவில் அமைப்புக்கள், ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருக்கின்றன.
சாரா ஜெஸ்மின் என்ற பெண் சஹ்ரானுடன் மிக நெருக்கமாக செயற்பட்ட ஒருவராவார். சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் சாரா உயிர் பிழைத்துள்ளதாக சஹ்ரானின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதும், சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் மீட்க்கப்பட்ட சடலங்களில் சாரா ஜெய்மினுடைய சடலம் காணப்படவில்லை என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த வகையில் சாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பங்கேற்றிருந்தார். சாரா ஜெஸ்மின் தொடர்பில் அவர்களிடம் அரசாங்கம் ஏதேனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததா? சாரா இந்தியாவிலிருப்பது உண்மை எனில் அவரை நாடு கடத்துமாறு ஏதேனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதா? சாரா ஜெஸ்மின் கண்டு பிடிக்கப்பட்டால் இதன் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரியை இனங்காண்பது மிக இலகுவானதாகும்.
2019 ஏப்ரல் 20ஆம் திகதி இரவு சங்ரிலா ஹோட்டலில் சஹ்ரான் மற்றும் இலாம் என்ற நபரும் தங்கியிருந்தனர். 21ஆம் திகதி அவர்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 2019 ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை சங்கிரா ஹோட்டலிலுள்ள சகல அறைகள் தொடர்பான தகவல்களும் கோரப்பட்டுள்ளன. இதன் போது சஹ்ரான் தங்கியிருந்த 616 இலக்க அறையில் ஏப்ரல் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் தங்கியிருந்தவர்கள் யார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை.
2019 ஏப்ரல் 14 முதல் 19 வரை சஹ்ரான் தங்கியிருந்த 616 இலக்க அறையில் தங்கியிருந்தோர் தொடர்பான தகவல்கள் இல்லை. குறித்த அறைகளில் கதவுகளைத் திறப்பதற்கு இலத்திரனியல் அட்டையே பயன்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சஹ்ரானின் அறைக்கான இலத்திரனியல் அட்டை மாத்திரம் ‘விருந்தினர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய அறைகளுக்காக அட்டைகள் தொடர்பான தரவில் அவரவர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் விசாரணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றதா? சஹ்ரான் அந்த அறைக்கு வர முன்னர் அதில் தங்கியிருந்தது யார்? கடந்த அரசாங்கம் அவ்வாறு எவரும் அங்கு தங்கியிருக்கவில்லை என்று கூறியது. எனவே இந்த அரசாங்கம் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததா என்று கேட்கின்றோம். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளிலும் சஹ்ரான் தங்கியிருந்த அறை தொடர்பான தகவல் மாத்திரம் வழங்கப்படவில்லை. அது எவ்வாறு இடம்பெற்றது?
இதேவேளை சஹ்ரான் தங்கியிருந்த அறைக்கு ஓரிரு அறைகளுக்கு அப்பால் காணப்பட்ட 623 இலக்க அறையில் தங்கியிருந்தவர்களும் குண்டு வெடிப்பின் பின்னர் காணாமல் போயுள்ளனர். அன்றைய தினம் ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு இருவர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த இருவரும் யார்? எங்கிருக்கின்றனர்? இவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டள்ளதா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து பதிலை எதிர்பார்க்கின்றோம் என்றார்.