வாக்குறிதியளித்த வளமான நாடும் அழகான வாழ்க்கையும் எங்கே? சஜித் பிரேமதாச கேள்வி.
வாக்குறுதியளித்த வளமான நாடும், அழகான வாழ்க்கையும் எங்கே?
வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. இன்று பலர் இந்த அரசாங்கத்தை பொய் கூறும் அரசாங்கம் என்றும், ஏமாற்று அரசாங்கம் என்றும், கேவலமான அரசியலில் ஈடுபடும் அரசாங்கம் என்றும் கூறுகின்றனர். 24 மணி நேரமும் பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம் மக்களை திசைதிருப்பி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் அனுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதி பேமடுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இன்று அரிசி, பால் மா, தேங்காய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து, நாட்டு மக்களின் உப்புத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அரசாங்கமாக இந்த அரசாங்கம் காணப்படுகிறது. எரிபொருள் சலுகை வழங்குவதாக கூறினாலும் இதுவரை இவர்களால் வழங்க முடியாதுபோயுள்ளது. மின்சார கட்டணத்தை கூட இவர்களால் முறையாக குறைக்க முடியாதுபோயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மின்கட்டணத்தை 33% குறைப்பதாகச் சொன்னார்கள். கனமழையில் இலாபம் ஈட்டும் போதும் மின்சார சபை மின்கட்டணத்தைக் குறைக்க முடியாது என தெரிவித்தது. பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு உண்மைகளை விளக்கியதால், 20% மின்கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தது. அடுத்த போகத்துக்கான வயல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், உர மானியம் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் உரங்களின் விலைகள் அதிகரிக்கும். யானை மனித மோதலினால் பாரிய சேதம் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இது விவசாய சமூகத்தையும் முழு நாட்டையும் ஏமாற்றும் நடவடிக்கையாகும். இந்த பிரச்சினைகள் எதற்கும் அரசாங்கத்திடம் பதில் இல்லை.