உள்நாடு

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வழங்கிய அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளையும், கொள்கைகளையும் இன்று முழுப் பொய்யாக மாற்றியுள்ளது. நாட்டு மக்கள் தற்போது மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருவதுடன் பொருட்களின் விலைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. மின்கட்டணத்தை 33% குறைப்போம் என்று இந்த ஆளும் தரப்பினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறினர். மக்கள் எழுப்பிய குரலால் தான் 20% கூட மின்கட்டணம் கூட குறைக்கப்பட்டன. அரசாங்கம் தீர்மானம் எடுத்து இதனை நிறைவேற்றவில்லை. மக்களின் கருத்துக்களுக்கு ஏற்பவே இது குறைக்கப்பட்டது. எஞ்சிய 13% குறைப்பை இந்த அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும். எரிபொருள் விலைகள் தொடர்பில் அரசாங்கம் இவ்வாறான கொள்கைகளையே பின்பற்றி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் மூதூர் நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதாக கூறினர். ஆனால் இந்த அரசாங்கமும் தற்போது எரிபொருள், அனல், நிலக்கரி மின் நிலைய மாபியாக்களுக்கு அடிபணிந்துள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நாட்டின் எரிசக்தி கட்டமைப்பில் இருந்து படிப்படியாக அகற்றி, பழைய மாபியாவுக்கு இடம்கொடுக்கும் நிலையை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களை ஏமாற்றி இந்த அரசாங்கம், விவசாயத்திற்கு பெற்றுத் தருவோம் என உறுதியளித்த பக்க பலத்தைக் கூட வழங்காமல், உர மானியமோ, தரமான உரமோ, உத்தரவாத விலையோ இன்னும் பெற்றுக் கொடுத்த பாடில்லை. மனித – காட்டு யானை மோதலுக்கு புதிய தீர்வுகள் இந்த அரசாங்கத்திடமில்லை. உடமைகள், உயிர்கள் மற்றும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடுகள் வழங்கியபாடுமில்லை. இவர்கள் மேடையில் பொய், ஏமாற்று, கேவலமான அரசியலையே செய்து வந்தனர் என்பது இன்று நிரூபனமாகி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 அன்று தகனமா, அடக்கமா என்ற பிரச்சினை எழுந்த போது ஐக்கிய மக்கள் சக்தியே அதற்காக குரல் எழுப்பியது.

ஐக்கிய மக்கள் சக்தியே முஸ்லிம் மக்களின் கலாச்சார மற்றும் மத உரிமையான தகனமா அடக்கமா என்ற பிரச்சினை எழுந்து போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. தற்போதைய அரசாங்கத்தைச் சேர்ந்த அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த உரிமைக்காக குரல் எழுப்பவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே இந்த உரிமைக்காக குரல் எழுப்பிய ஒரே தேசியக் கட்சியாகும். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்கு ஜனநாயக ரீதியில் போராடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 என்றும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்போம்.

பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி அன்றும் இன்றும் நாளையும் என என்றுமே முன்நிற்கும். இந்த மக்கள் ஜனநாயக பலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் வாழ வேண்டும். ரணசிங்க பிரேமதாச கூட இவ்விரு நாடுகளும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்ற நிலைபாட்டில் இருந்தார். அண்மையில், நமது நாட்டில் ஒரு இளைஞன் பலஸ்தீன மக்களின் உரிமைகளை ஆதரித்து ஸ்டிக்கர் ஒட்டியபோது, ​​பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, தடுப்புக் காவலில் வைத்திருக்கும் உத்தரவைக் கூட அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி பிறப்பித்தார். இந்த நாட்டு மக்களுக்கு தமது கருத்துக்களைப் பேசுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் உரிமைகள் காணப்படுகிறது. இந்த உரிமைகளை யாராலும் தடை செய்ய முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *