பேருவளை நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும்; முன்னாள் நகர பிதா மஸாஹிம் முஹம்மத்
பேருவளை நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என மருதானை வட்டார வேட்பாளர் முன்னால் நகர பிதா அல்-ஹாஜ் மஸாஹிம் முஹம்மத் கூறினார்.
பேருவளை மருதானை அரப் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெருமளவிலான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் மஸாஹிம் முஹம்மத் மேலும் கூறியதாவது,
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் முழு நாட்டு மக்களையும் ஏமாற்றி தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். மக்கள் இதற்கு ஏமாந்தார்கள். இன்று என்ன செய்வது என்பது பற்றி சிந்திக்கின்றனர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி படுதோல்வியை தழுவும். நாட்டு மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.
பேருவளை நகர சபையை தேசிய மக்கள் சக்தியாலோ அல்லது சுயேற்சை அணியாலோ வெற்றி கொள்ள முடியாது. இவர்களின் போலி வாக்குறுதிகளை மீண்டும் மக்கள் நம்பத் தயாரில்லை. எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாதவர்களே இந்த இரு அணிகளிலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் எவ்வாறு நகர சபையை நிர்வகிக்கப் போகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுகின்றவர்கள் சிறந்ததொரு குழுவினராகும். இதனால் மக்கள் ஆதரவு மேலும் பெருகியுள்ளது.
முழு நாட்டு மக்களினதும் ஆணை தேசிய மக்கள் சக்திக்கே என்று சொல்கின்றவர்களுக்கு இத்தேர்தலில் மக்கள் சரியான செய்தியை சொல்லி நல்ல பாடம் புகட்டுவார்கள்.
பேருவளை நகர சபைக்கு சக்தியுள்ள, தைரியமான எல்லா சவால்களுக்கும் முகம் கொடுக்கக்கூடியவர்கலே தேவை. மக்கள் இம்முறை தேர்தலில் இவ்வாறான அரசியல் அனுபவமும், தைரியமும் கொண்ட குழுவையே தெரிவு செய்ய வேண்டும். அந்த தகுதி ஐக்கிய மக்கள் சக்தி குழுவிடமே உள்ளது.
(பேருவளை பீ.எம் முக்தார்)