ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக்கூறியவர்கள் இஸ்ரேலின் மனிதப்படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய முஸ்லிம் இளைஞன் ருஸ்தியை பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பிரயோகித்து கைது செய்தமை முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவிப்பு
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக்கூறியவர்கள் இஸ்ரேலின் மனிதப்படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய முஸ்லிம் இளைஞன் ருஸ்தியை பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பிரயோகித்து கைது செய்தமை முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது எனப் பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள சித்திரவதைக் கூடங்கள், சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றை விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் இன்று(10.04.2025) பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்படி தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்…
பலஸ்தீன மக்கள் மீது தொடர்ச்சியான வன்முறைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை கொண்ட ஒரு நாடாக எமது நாடு அமைந்துள்ளது. பலஸ்தீனத்தில் புனித ரமலான் மாதத்திலும் பெருநாள் தினத்திலும் மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொண்ட இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டிக்கும் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக சென்ற 22.03.2025ம் திகதி கொழும்பில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்த 22 வயதையுடைய ருஷ்தி எனும் இளைஞனை இலங்கை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இன அழிப்பினை மேற்கொண்டு வருகின்ற இஸ்ரேல் சில தினங்களுக்கு முன்னர் குண்டு வீசி நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வெடித்து துண்டு துண்டாகி சிதறும் வீடியோ காட்சிகள் வெளி வந்தன. இஸ்ரேல் மனிதாபிமானமற்ற முறையில் பலஸ்தீன் மீது தாக்குதல் நடத்தி வருவதனை மனிதநேயமுள்ளவர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் கண்டித்தே ஆக வேண்டும். இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை 50,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பிரமுகர்கள் கடந்த காலங்களில் பலஸ்தீன மக்களின் போராட்டங்களில் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கினார்கள்.
இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம் என்பது உலகம் அழியும் வரை நடைபெறப் போகும் பிரச்சினைகளில் ஒன்றாகும். உலகம் பூராகவும் வாழும் எமது முஸ்லிம் மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். அதில் இலங்கையில் வாழும் முஸ்லிம்களாகிய எங்களின் உணர்வுகளையும் இஸ்ரேலுக்கு எதிராக வெளிக்காட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்பதனை இப்பாராளுமன்றத்தில்
தெரிவிக்க கடமைப்பட்டிருப்பதுடன் பலஸ்தீனர்களின் வெற்றிக்காக இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் இறைவனிடம் பிரார்த்தனை செய்த வண்ணமே உள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியினர் ஆளும் கட்சியான பின்பு பலஸ்தீன விடுதலைக்காக போராட்டத்தில் தமது ஆதரவை வெளிப்படையாக வெளிப்படுத்துவதற்கு பின்வாங்குகின்றனர். இதனால் இவர்களின் இச்செயற்பாடுகளின் மீது மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சந்தேகம் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சியினர் வழங்கிய வாக்குறுதிகளை நம்பி குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் சுமார் 11 லட்சம் வாக்குகளை அளித்துள்ளனர். புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவோம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார முறைமையை இரத்துச் செய்வோம், மாகாண சபைத் தேர்தலை நடாத்துவோம்
என மக்களுக்கு வாக்குறுதியளித்தவர்கள் தற்போது அவற்றை மறந்து செயற்படுகின்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி புனித ரமலான் மாதத்தில் ஆக்கிரமிப்பு படைகளால் பலஸ்தீன காஸா பகுதியில் உள்ள மக்கள் மீது நிகழ்த்தப்படும் மனிதப் படுகொலைகளை கண்டித்து உலக யுத்த தர்மம், மனித நீதி, சர்வதேச சட்டங்கள், மனிதாபிமானம், நீதி , நேர்மை போன்ற எதுவுமே இல்லாத இஸ்ரேலுக்கு எதிராக ஒரு ஸ்டிக்கர் ஒட்டியதில் என்ன தவறு இருக்கின்றது ??? ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் உரிமையினை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட ருஷ்தி தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் திரு புத்தி மணதுங்க கைது செய்யப்பட்ட ருஷ்தி இலங்கை ஜம்மிய்த்துல் உலமா சபையின் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உண்மையில் அவர் சாதாரண முஸ்லிமின் நிலையை தாண்டிய நிலையில் இருப்பதாகவும் அவர் புணர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திரு மணதுங்க கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது எனவும் இச்செய்தியை தாங்கள் மறுப்பதாகவும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கூறியுள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் உயரிய சபையான அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை தொடர்பாக போலியான கருத்தினை ஒரு நாட்டின் பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
தற்போது தீவிரவாத விசாரணை பிரிவில் (TID) அவரை 90 நாட்கள் வரை தடுப்பு காவலில் வைத்திருக்க PTA சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ருஷ்தி தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் ருஷ்திக்கு எதிரான வழக்கு தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தி கடந்த கால ஆட்சியாளர்கள் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் தவறுகளையும், ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் மக்கள் மத்தியில் ஜனநாயக முறையில் கருத்துக்களை வெளிப்படுத்திய போது ஆளுங்கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்த அனைவரையும பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி பழிவாங்கினர்.
இக்கால கட்டத்தில் எதிர்க்கட்சியில் இருந்த இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளுங்கட்சியினரின் தவறான செயற்பாடுகளை விமர்சனம் செய்ததுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு குரல் கொடுத்த இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இஸ்ரவேலரினால் பலஸ்தீன காஸாவில் நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைகளை உலகமே கண்டித்து வருகின்ற இக்காலகட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகத்தின் வாக்கு பலத்தினால் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது இனத்துக்காக ஜனநாயக ரீதியில் குரல் கொடுத்து இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய ஒரே ஒரு காரணத்திற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய ஜனாதிபதி கையொப்பமிட்டது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பொய்யான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள ருஷ்தி தண்டனையை அனுபவித்து வருவதுடன், அவருடைய 13 வயது தங்கையை விசாரணைக்கு அழைத்து வரச் சொல்லும் நிலை உருவாகியுள்ளது. பலஸ்தீன ஜனநாயக போராட்டத்திற்கு குரல் கொடுப்பவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம். இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும். இவ் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மக்கள் ஒன்று கூடும், கருத்து தெரிவிக்கும் அடிப்படை மனித உரிமை மறுக்கப்படுகின்றதா ? என்பதனை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
(கே. எ. ஹமீட்)