உள்நாடு

சுயேட்சை அணியை வெற்றிபெறச் செய்வதன் மூலம் பேருவளை நகரசபை மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.தலைமை வேட்பாளர் அஸாம் பளீல் ஹாஜி.

பேருவளை நகர சபை தேர்தலில் சுயேற்சை அணியை வெற்றி பெறச் செய்வதன் மூலமே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என பேருவளை குழு தலைமை வேட்பாளர் அல்-ஹாஜ் அஸாம் பளீல் கூறினார்.

பேருவளை பெரேரா வீதியில் உள்ள மர்ஹும் எம்.எஸ்.எம் பளீல் ஹாஜியாரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அஸாம் பளீல் மேலும் கூறியதாவது, பளீல் ஹாஜியாரின் குடும்பத்தினர் அரசியல் மூலம் பேருவளை மக்களுக்கு சிறந்த பல சேவைகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். அதன் காரணமாகவே மக்கள் எம்மோடு தொடர்ந்தும் கைகோர்த்துள்ளனர்.

ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகமின்றி நாம் மக்களுக்கு நீதியாகவும், நேர்மையாகவும் இன, மத, மொழி, கட்சி பேதமின்றியும் பாரிய சேவைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். எதிர் காலத்திலும் இவ்வாறே பணியாற்றுவோம்.

பேருவளை நகர சபைத் தேர்தலில் பல கட்சிகள் இம்முறை போட்டியிடுகின்றன. இந்த எல்லா அணிகளையும் விட தலை சிறந்த குழுவொன்று சுயேற்சையாக களமிறங்கியுள்ளன. முழு பேருவளை வாழ் மக்களும் இன்று சுயேற்சை அணியை வெற்றி பெறச் செய்ய எம்மோடு கைகோர்த்துள்ளனர்.

எல்லா வட்டாரங்களிலும் துடிதுடிப்புள்ள, மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்களை நாம் நிறுத்தியுள்ளோம். இதன் மூலம் எமது வெற்றி உறுதியாகியுள்ளது. இந்த வெற்றி மூலம் மக்களுக்கு சிறந்த சேவைகளை எதிர் காலத்தில் பெற்றுக் கொடுப்போம்.

மர்ஹும் எம்.எஸ்.எம் பளீல் ஹாஜியார், முன்னாள் எம்.பி மர்ஜான் பளீல், முன்னாள் நகர பிதா மில்பர் கபூர் ஆகியோர் பேருவளை மக்களுக்கு அரசியல் மூலம் செய்த சேவைகளை மக்கள் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.

எனவே, எனது தலைமையிலான சுயேற்சை குழுவை அமோக வாக்குகளினால் வெற்றி பெறச் செய்து நகர சபையின் ஆட்சியை ஒப்படைக்க அணி திரளுங்கள். மக்களுக்கு சிறந்த சேவைகளை நாம் பெற்றுக் கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *