பேருவளை நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும்.மஹகொடை கூட்டத்தில் ஹஸன் பாஸி.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பேருவளை நகர சபை நிச்சயமாகவே கைப்பற்றும் என முன்னாள் உப நகர பிதா ஹஸன் பாஸி கூறினார்.
பேருவளை மஹகொடையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது, இன்று ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு இத் தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது உறுதி. பேருவளை நகர சபை தேர்தலில் பொதுஜன பெரமுனவின் முகவராகவே சுயேற்சை குழு மறைமுகமாக களமிறக்கப்பட்டுள்ளன. இதைப் பற்றியும் பேருவளை மக்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. கடந்த கால நாடகங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இந்த நிலையில் சுயேற்சை அணிக்கும் பேருவளை மக்கள் வாக்களிப்பதில்லை என்ற முடிவில் உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி வரலாறு காணாத வெற்றி பெற்று எல்லா வட்டாரங்களையும் கைப்பற்றி ஆட்சி அமைக்கும். அதனூடாக மக்களுக்கு சிறந்த முறையில் சேவைகளை பெற்றுக் கொடுப்போம். நகர சபை ஆட்சியை சிறப்பாக முன்னெடுப்போம். பேருவளை நகரை துரிதமாக கட்டியெழுப்பி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி சிறந்ததொரு சேவையைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.
மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் தென்னிலங்கையிலேயே அழகான முன்னேற்றம் கண்ட பகுதியாக பேருவளையை நாம் மாற்றியமைப்போம்.
கல்வி, விளையாட்டு, சுகாதாரத் துறைகளை கட்டியெழுப்பி வீதி புணரமைப்பு, வடிகான் திட்டங்கள், வெள்ளத்தடுப்பு வேலைத் திட்டம் உட்பட பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்போம்.
எமது அமைப்பாளர் இப்திகார் ஜமீல் இதற்கான வேலைத் திட்டத்தை தயாரித்துள்ளார். அரசினதும், தனியார் துறையினதும், விஷேடமாக வெளிநாட்டினதும் ஒத்துழைப்பினை பெற்று பேருவளை நகர பகுதியை அபிவிருத்தி செய்வோம் என்றார்.
(பேருவளை பீ.எம் முக்தார்)