உள்நாடு

சர்வகட்சி மாநாட்டில் சாதகமான யோசனைகளை முன் வைத்தேன்

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில், இலங்கை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள 44% பதிலடி வரி விதிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி, இதனை நிவர்த்தி செய்யும் விதமாக பல சாதகமான யோசனைகளை முன்வைத்தேன். தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை திருத்துவதற்கான யோசனையும் கூட ஜனாதிபதியிடம் இதன்போது முன்வைத்தேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள புதிய தீர்வை வரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (10) கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டின் நிறைவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கருத்தை முன்வைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

🟩 வர்த்தக வாணிபத்தில் அறிவு கொண்ட நிபுணர் குழுவை அவசரமாக அமெரிக்காவிற்கு அனுப்பவும்.

நமது நாடு உட்பட பல நாடுகள் மீது விதிக்கப்பட்ட பதிலடி வரியை அமெரிக்கா 90 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது. மேற்கொண்டு ஏற்பட்டுள்ள அபாய நிலை குறித்தும் ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடினேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆடைத் துறையில் 350,000 நேரடி வேலை வாய்ப்புகளும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மறைமுக பயனாளிகளும் இருந்து வருகின்றனர். ஆடைத் துறையில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 38% பங்கு வகிக்கும் ஒரு நாடாக அமெரிக்கா மிகப்பெரிய ஏற்றுமதி மையமாக காணப்பட்டு வருகிறது. 28% ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், 13% ஐக்கிய இராச்சியத்துக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வர்த்தகம் குறித்த நிபுணத்துவ அறிவு கொண்ட குழுவொன்றை அவசரமாக அமெரிக்காவிற்கு அனுப்பி, சிறந்த கலந்துரையாடலை முன்னெடுத்து, ஏற்றுக் கொள்ளத்தக்க சாதகமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டேன்.

🟩 இங்கு பாதிக்கப்பட்ட பிராந்திய நாடுகளுடன் மூலோபாய ரீதியாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு நடத்தும் கருத்துப் பகிர்வுகள் மூலம் எழும் யோசனைகள் மற்றும் மூலோபாய முன்மொழிவுகள் தொடர்பில் சில அரசியல் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நான் இங்கு சுட்டிக்காட்டினேன்.

🟩 ஒப்பீட்டு ரீதியாக நன்மைகளைப் பெற்றுத் தரும் வர்த்தக ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துங்கள்.

எமது நாட்டிற்கு ஒப்பீட்டு ரீதியாக அனுகூலங்களைப் பெற்றுத் தரும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசித்தையும் இங்கு நான் சுட்டிக்காட்டினேன். எமது நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை உருவாக்கி, மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் தலமாக இலங்கையை மாற்றுவதற்குமான யோசனைகளையும் இதன்போது முன்வைத்தேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 ஏற்றுமதிக்கான இடங்களை பன்முகப்படுத்துங்கள்.

தற்போது நமது நாட்டின் ஏற்றுமதி ஒருசில இடங்களுக்கு மட்டுமே நடந்த வருகின்றன. ஏற்பட்டுள்ள அபாயங்களை சுட்டிக்காட்டி, நமது நாட்டின் ஏற்றுமதி இலக்குகளை பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இங்கு சுட்டிக்காட்டினேன். மேலும், பசுமையை மையமாகக் கொண்ட ஏற்றுமதித் துறையை ஆரம்பிப்பதன் முக்கியத்துத்தினையும் இங்கு சுட்டிக்காட்டினேன். அவ்வாறே, இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளின் போது இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க நிதியமொன்றை தாபிப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினேன். ஏற்றுமதிக்கு மதிப்பைக் கூட்டி அதிக பெறுமானத்தை வழங்க வேண்டும் எனவும் இங்கு தெரிவித்தேன்.

🟩 GSP+ வரிச் சலுகைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுங்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பங்குதாரராகும். GSP+ சலுகைகள் நமது நாட்டிற்கு மிகப்பெரிய பக்க பலத்தை வழங்குகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 66 கட்டண வரிகளில் 85% இந்த GSP+ பிரிவின் கீழ் வருகின்றன. நிபந்தனைகளோடு இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதனால் நல்லாட்சியை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்தும், நிகழ்நிலைக் காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளல், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை வலுப்படுத்தும் நல்லாட்சிக்கான நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த நிவாரணம் கிடைக்கப்பெற்றுள்ளன. 460 மில்லியன் டொலர் பெறுமதியான சந்தையையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளும் எதக்கு பெரும் பக்கபலத்தை வழங்கி வருகின்றன. எனவே இதனை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என இங்கு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினேன்.

இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாவிட்டால், ஐரோப்பிய ஒன்றிய சந்தையும் இழக்கப்படலாம். இந்த பாரபட்சமான பொருளாதார சூழலால் உண்மையிலேயே பாதிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் சாதாரண மக்கள்தான். ஆனபடியால், நாட்டின் உழைக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வர்த்தகக் கொள்கையும் பொருளாதாரக் கொள்கையும் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டுமென இங்கு சுட்டிக்காட்டினேன்.

🟩 தற்போதுள்ள IMF இணக்கப்பாட்டை திருத்துங்கள்.

தற்போதுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டில் காணப்படும் ஆபத்தான நிலைமையை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினேன். 2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனை அடைப்பதற்கு உயர் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரச வருமானம் பேணப்பட வேண்டும் என்பதால் இது குறித்து கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டேன். 2028 ஆம் ஆண்டில் கடனை அடைக்க, 2025, 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் எமது நாடு அதிக பொருளாதார வளர்ச்சியையும் அரச வருவாயையும் பேண வேண்டியுள்ளன. தற்போதைய சூழலில் வெளிநாட்டுக் கடனை அடைப்பது என்பது கடினமாக இருக்கும் என்பதால், 2033 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடனை அடைக்க சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புதிய இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். இந்த யோசனைகளையும், முன்மொழிவுகளையும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் முன்வைத்தேன். இதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் வெற்றிகரமான பொருளாதார இலக்குகளை நாம் அடைய முடியும் என இங்கு மேலும் சுட்டிக்காட்டினேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *