ஐக்கிய மக்கள் சக்தி அதிக சபைகளை கைப்பற்றும்; பேருவளை அமைப்பாளர் இப்திகார் ஜெமீல்
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பாலான சபைகளை கைப்பற்றி ஆட்சியமைத்து பிரதேச மக்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் என பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீல் கூறினார்.
பேருவளை நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுக்கு ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து அவர்களுக்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் கட்சி ஆதரவாளர்களுடனான விஷேட சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.
சீனன்கோட்டையில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெருமளவிலான சிங்கள, முஸ்லிம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்திகார் ஜமீல் இங்கு மேலும் உரையாற்றும் போது, பேருவளை நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றை நிச்சயமாக இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும். பேருவளை மக்கள் ஐக்கிய மக்கள் சக்தி மீதும் தலைவர் ஸஜித் பிரேமதாஸ மீதும் இன்னும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பேருவளையில் இரு உள்ளூராட்சி சபைகளையும் நாம் மிக இலகுவாக கைப்பற்றுவோம்.
பேருவளை நகர சபை பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பிரதேச சபை பகுதியில் செய்ய வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் நாம் திட்டம் தயாரித்துள்ளோம். மக்களுக்கு தலை சிறந்த சேவையை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தி மூலம் நாம் தலை சிறந்த மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். அரசியல் அனுபவமுள்ள இவர்களினால் மக்களுக்கு திருப்திகரமான சேவைகளைப் பெற்றுக் கொடுக்க முடியும்.
பேருவளை மக்கள் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு இரு உள்ளூராட்சி சபைகளினதும் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒப்படைத்து சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
(பேருவளை பீ.எம் முக்தார்)