உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படையுங்கள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வெற்றிகரமாக முன்னெடுக்க நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் நகர பிரதேச சபைகளின் அதிகாரங்களை நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியிடமே ஒப்படைக்க வேண்டும் என பேருவளை நகர சபை தேசிய மக்கள் சக்தி தலைமை வேட்பாளர் முஹம்மத் மபாஸின் கூறினார்.
பேருவளை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது, கிராமங்களையும், நகரங்களையும் சிறந்த திட்டங்களுடன் அபிவிருத்தி செய்து மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை பெற்றுக் கொடுப்பதே ஜனாதிபதியினதும், அரசினதும் இலக்கமாகும்.
ஊழல், லஞ்சம், வீண் விரயம், அதிகார துஷ்பிரயோகம் இன்றி தூய்மையானதும் நேர்மையானதுமான அரசியல் பணிகளை தேசிய மக்கள் சக்தி இன்று மேற்கொண்டுள்ளது. இதையே மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
பேருவளை நகர சபை பகுதியை கட்டியெழுப்ப வேண்டும். இந்த உள்ளூராட்சி சபையை பல கட்சிகளும், சுயேற்சை அணிகளும் மாறி மாறி ஆட்சி செய்த போதிலும் இந்த நகரம் இன்னும் முழுமையாக அபிவிருத்தியடையவில்லை. இந்த நிலை தொடர இடமளிக்கக் கூடாது.
பேருவளை மக்கள் இம்முறை தேர்தலில் மாற்றமொன்றை ஏற்படுத்த எம்மோடு கைகோர்த்துள்ளனர். இது மகிழ்ச்சிக்குறியதாகும். பேருவளை நகர சபையையும், பிரதேச சபையையும் இத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
இந்த வெற்றி ஒரு சாதாரண வெற்றியன்றி வரலாறு காணாத வெற்றியாக அமைய வேண்டும். அதற்காக நாம் அணி திரள்வோம்
(பீ.எம் முக்தார்)