ஓட்டமாவடி வடிகான் பிரச்சினைக்கு உடனடித்தீர்வு.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி -01ம் வட்டாரத்தில் வடிகான் தொடர்பில் கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் முறைப்பாட்டையடுத்து கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இன்று திங்கள்கிழமை குறித்த இடத்திற்கு விஜயம் செய்த சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையிலான குழுவினர் வாடிகானின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்ததுடன், கழிவுநீர் வடிந்தோட தடையாகவுள்ள நபர்கள், கழிவு நீரை வடிகான்களில் விடுவோர் மற்றும் குப்பை கூழங்களை வடிகான்களில் இடுவோருக்கெதிராக எச்சரிக்கை விடுத்ததுடன், வடிகானை சுத்தமாக வைத்திருத்தல், டெங்கு அபாயம் தொடர்பில் ஆலோசனைகளையும் வழங்கினர்.
அத்துடன், குறித்த வடிகான்களில் நிரம்பியுள்ள குப்பை கூழங்களை அகற்றி, கழிவு நீரை வடிந்தோட தேவையான உடனடி நடவடிக்கைகளை ஓட்டமாவடி பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.
இக்கள விஜயத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ்,
பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.எம்.நெளபர், மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.நெளபல், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.ஆர்.ஹக்கீம், என்.எம்.ஷியாம், ஏ.எல்.நஸீர், பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் திரு அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த வடிகான் ஓட்டமாவடி 01ம் வட்டாரத்தில் ஜும்ஆ ப்பள்ளிவாயல், தனியார் கல்வி நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் என அதிக சன நடமாட்டமுள்ள பிரதேசத்தில் காணப்படுவதுடன், குப்பை, கூழங்கள் கழிவுநீர் தேங்கி துர்வாடை வீசுவதுடன், உயிராபத்துக்களை உண்டாக்கிய நுளம்புகள் பெருக்கமடைந்தும் காணப்படுகின்றது.
இதன் காரணமாக டெங்கு போன்ற உயிர்கொல்லி நோய்கள் இப்பிரதேசத்தில் உருவாகும் நிலையும் காணப்படுகின்றது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அடைபட்டுள்ள கழிவுகளை அகற்றி நீர் வழிந்தோடும் அமைப்பை சீர்செய்வதற்கும், இதனால் ஏற்பட்டுள்ள சுகாதாரச்சீர்கேடுகளைச் சீர்மைப்பதற்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் சார்பாக மூவ் கல்குடா டைவர்ஸ் அனரத்த அவசர சேவை பிரதேச சபை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம் போன்றவற்றுக்கும் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு கல்குடா டைவர்ஸ் அனரத்த அவசர சேவை நன்றிகளை தெரிவித்துள்ளது.















(எஸ்.எம்.எம்.முர்ஷித்)