ஜனாதிபதி ட்ரம்பின் வரி அமுல்படுத்தப்பட்டால் ஒரு வருடத்தின் பின்னர் ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைகள் ஆபத்தைச் சந்திக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியினது அரசாங்கம் நமது நாட்டின் ஏற்றுமதிகள் மீது 44% பரஸ்பர வரி விதித்துள்ளது. நமது நாடு அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 88% வரி விதித்தமையே இதற்கு காரணமாகும். இதன் காரணமாக, நமது நாடு ஏற்றுமதி விலைக்கான போட்டித்தன்மையை இழந்துள்ளது. நாட்டின் ஆடை ஏற்றுமதியில் 40% அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது. இது ஆபத்தான நிலைமைகளை தோற்றுவிக்கும் என்பதால், சில மாதங்களுக்கு முன்பே இது குறித்து அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தோம். டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி மகத்தான மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்த சந்தர்ப்பத்தில், நான் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் சுட்டிக்காட்டி முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்தேன். அதனை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் இருந்த போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசுவதற்கான நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் தீர்வை வரி விதிக்கப்படலாம் என்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்ட போதும் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தி வேடிக்கை பார்த்தது. தற்போது என்னதான் கூறினாலும் இந்த வரி விதிப்பு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
புத்தாண்டு விடுமுறைக்கு வீடுகளுக்குச் செல்லும் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் புத்தாண்டு விடுமுறையின் முடிவில் வேலை தொடர்பில் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வர். இதன் காரணமாக, தொழிற்சாலைகள் வீழ்ச்சி கண்டு, தொழிலாளர்களது தொழில்கள் இல்லாது போய், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும். இது ஒட்டுமொத்த மக்களையும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கும். அந்நிய செலவாணி குறைவடையும். பொருளாதார வளர்ச்சி விகிதம் கீழ் நிலைக்கு வரும். அவசர மாற்றீடுகள் மூலம் இந்த வருமானத்தை எம்மால் ஈட்ட முடியாது போகும். ஆகையால் 2028 ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்துவதற்கு இது பெரும் தடையாக அமைந்து காணப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2033 இல் செலுத்த வேண்டிய கடனை 2028 இல் இருந்து அடைக்க வேண்டியுள்ளன. இதற்காக பேண வேண்டிய பொருளாதார வளர்ச்சி விகிதத்திற்கு இந்த வரி விதிப்பு மரண அடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டுமொரு பொருளாதார சுனாமி நாட்டை தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் மக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
புத்தளம், நாத்தாண்டிய பிரதேசத்தில் நேற்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
🟩 குழுக்களை நியமிப்பதால் எந்த பயனும் ஏற்படாது.
இது குறித்து கண்காணித்து ஆராய அரசாங்கம் இதுவரை ஒரு குழுவை நியமித்துள்ளது. இது போதாது. இது தொடர்பில் திறமையான தூதுக்குழுவொன்றை அனுப்பி எமது நாட்டிலிருந்து பதிலை சரியாக முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகளுடன் இணைந்து பொதுவான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
🟩 நமது நாட்டு ஆடை உற்ப்பத்திகளுக்கு இந்திய சந்தையில் அதிக வாய்ப்புகளைப் பெற்றுத் தாருங்கள்.
இலங்கை நாட்டின் ஆடைகள் மற்றும் இதர ஏற்றுமதிப் பொருட்களுக்கான இந்திய சந்தையை அணுகுவதற்கான வசதிகளை விரிவுபடுத்தித் தருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, நான் அவரிடம் கோரிக்கை விடுத்தேன் என என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.












