ஐந்து வருட ஆட்சிக்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். நீதி அமைச்சர் உறுதி.
ஐந்து வருட பதவி காலத்துக்குள் நாட்டு மக்களின்அங்கீகாரத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவோம்.
எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் போலியான குற்றச்சாட்டுக்கள் குறித்து அவதானம் செலுத்த போவதில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தீவிர கரிசணை கொண்டுள்ளோம். நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு திருத்தம் குறித்து முரண்பாடான தன்மை காணப்படுவதை ஏற்றுக்கொள்கிறோம்.
அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம்.
ஐந்து ஆண்டு பதவி காலத்துக்குள் மக்கள் வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மறக்கவில்லை. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டு அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம். தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும். இந்த விடயம் குறித்து எதிர்வரும் காலப்பகுதியில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஏதும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.
ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்தால் அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுகிறார்கள். ஊழல்வாதிகள் அரசியல் பழிவாங்கல் என்ற சொல்லை தமது பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. பொலிஸ் பிரிவு முறையான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது.
அறிக்கையின் உள்ளடக்கம் மற்றும் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. விசாரணை கட்டமைப்பிலும், நீதிமன்ற கட்டமைப்பிலும் அரசாங்கம் தலையிடுவதில்லை.
அனைத்து நிறுவனங்களும் அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களுக்கு அமைய சுயாதீனமாக செயற்படுகின்றன என்றார்.