சமூக சேவையாளர் நிஸாம் ஹாஜியார் காலமானார்.
பேருவளை மருதானை அரப் வீதியைச் சேர்ந்த மூத்த சமூக சேவையாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமான எம்.ஜே.எம் நிஸாம் ஹாஜியார் (வயது 81) 30ஆம் திகதி இரவு காலமானார்.
மூன்று ஆண் பிள்ளைகளுக்கும், மூன்று பெண் பிள்ளைகளுக்கும் தந்தையான இவர் பேருவளை அப்ரார் கல்வி நிலைய தலைவராவார். ஓய்வு பெற்ற முஸ்லிம் விவாகப் பதிவாளரான இவர் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன உறுப்பினராகவும், களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன மூத்த உறுப்பினரும் ஷாதுலிய்யாத் தரீக்காவின் முகத்தமுஷ்ஷாதுலியுமாவார்.
முன்னாள் சபாநாயகம் தேசமான்ய அல்-ஹாஜ் எம்.ஏ பாக்கீர் மாக்கார், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரோடு மிக நெருக்கமாக பழகிய இவர் பிரபல சமூக சேவையாளருமாவார்.கல்வி, சமய, சமூக மற்றும் ஆண்மீக பணிக்காக தன்னையே அர்ப்பணித்த மர்ஹும் நிஸாம் ஹாஜியார் இப் பகுதி மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். இவரது ஜனாஸா இலங்கையின் முதலாவது பள்ளிவாசலான பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் மையவாடியில் 31ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸா நல்லடக்கத்தில் ஸதாத்மார்கள், உலமாக்கள், ஷாதுலிய்யா கலீபாக்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன, அப்ரார் கல்வி நிலைய முக்கியஸ்தர்கள் பெருமளவிலான மக்கள் பங்கு பற்றினர்.
இவரது மறைவு குறித்து முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன தலைவர் சாம் நவாஸ், களுத்துறை மாவட்ட சம்மேளன பதில் தலைவர் தாஹிர் பாஸி, அப்ரார் கல்வி நிலைய செயலாளர் கலாநிதி. மெளலவி அஸ்வர் அஸாஹிம் (அல்-அஸ்ஹரி) ஆகியோர் அனுதாபம் தெரிவித்து செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

(பேருவளை பீ.எம் முக்தார்)