எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது; அமைச்சர் கிரிஷாந்த அபேசேன
சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால் எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எரிபொருள் விலையை குறைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அத்துடன் தற்போதைய நிலைமையில் விலைகுறைப்பை மேற்கொள்ள முடியாது. காரணம் தற்போதும் நாங்கள் நாணய நிதியத்தின் விதிமுறைகளுக்கமையவே செயற்படுகிறோம். எமது வருமானம் மற்றும் செலவு என்பவற்றை கண்டறிய வேண்டிவரும்.
அரசாங்கத்துக்கு வருமானம் இருக்கவேண்டும். ஒரே நேரத்தில் விலையை குறைப்பது கடினமாகும். நாம் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி தொடர்பில் சிந்திக்க வேண்டி வரும். அதன் காரணமாகவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி வந்ததும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி தொடர்பில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
அவ்வாறான வேலைத்திட்டங்களினூடாகவே மின் கட்டணத்தை குறைக்கக் கூடியதாக இருக்கும். எரிபொருள் தொடர்பிலும் சரிபார்ப்புகளை மேற்கொள்ள வேண்டிவரும். இது நாணய நிதியத்துக்கும் தெரியும். எம்மால் ஒரேடியாக அந்த இலக்குக்குச் செல்ல முடியாது. இருந்தபோதும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாங்கள் பெரும் தொகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளோம். இம்முறை 10 ரூபாவால் விலையை குறைத்திருந்தாலும் இதற்கு முன்னரும் அரசாங்கம் பல்வேறு விதத்தில் விலைகளை குறைக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.
இதேவேளை, “எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் டீசல் விலை குறைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இருந்தபோதும் இன்னும் இரு மாதங்களில் வருடாந்த பஸ் கட்டணம் அமுல்படுத்தப்படும். எரிபொருள் விலை குறைப்பு எதனடிப்படையில் செய்தாலும் இம்முறை பஸ் கட்டணம் குறிப்பிட்டளவு அதிகரிக்கும்” என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.