பராட்டே சட்டம் மீண்டும் அமுலில். முன்னாள் அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஏமாற்றிவிட்டன
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பெரும் பங்களிப்பை வழங்குகிறார்கள்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% க்கும் அதிகமான பங்களிப்பை இவர்கள் வழங்குகிறார்கள். அதேபோல் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா மற்றும் வங்குரோத்து நிலமை காரணமாக இவர்களது பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, கடந்த காலத்தில் 263,200 தொழில் முயற்சிகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றது. அவற்றில் 59100 தற்காலிகமாகவும், 204100 நிரந்தரமாகவும் மூடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
11700 பெண் தொழில்முனைவோரின் தொழில்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பராட்டே சட்டத்தின் காரணமாக சொத்துக்கள் மற்றும் இடங்கள் இஷ்டத்திற்கு ஏலம் விடப்பட்டு வந்தன. பாராளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் எழுப்பி பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தினேன்.
கடந்த அரசாங்கத்திடமிருந்தும், இந்த அரசாங்கத்திடமிருந்தும் இந்த தொழிலதிபர்களுக்கு நிலையான தீர்வுகள் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் மார்ச் 31 ஆம் திகதி வரை பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திய போதிலும், அது இன்று முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. பராட்டே சட்டத்தை அமுல்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட போதிலும், இந்த வர்த்தகர்களுக்கு மாற்று தீர்வுகள், வட்டி நிவாரணம் மற்றும் கடன் குறைப்பு என்பவற்றை வழங்கி, நிரந்தர தீர்வை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டனர்.
கடந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் தற்காலிக தீர்வுகளை மட்டுமே வழங்கியதே தவிர நிலையான நிரந்தரத் தீர்வுகளை வழங்கவில்லை. இதன் காரணமாக அரசாங்கத்திற்கு உதவிய வர்த்தகர்கள் கூட பாரபட்சத்திற்கு ஆளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரை ஏமாற்றி அவர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது. முப்பெரும் பேரிடர்களால், இந்த வணிகங்கள் சீர்குலைந்து இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த வர்த்தகர்கள் தொடர்பில் இந்த புதிய அரசாங்கமும் கவனத்திற் கொள்ளாது இருந்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரன வட்டார வேட்பாளர்களுடன் இன்று (01) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.