உள்நாடு

பெரும்பான்மை அதிகாரத்தை மக்கள் அரசுக்கு வழங்கியது மருந்துகளுக்கு தட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்கல்ல; எதிர்கட்சி தலைவர் சாடல்

கடந்த காலங்களில், எமது நாட்டினது சுகாதாரத் துறையில் மருந்துப்பொருள் மோசடி, திருட்டு போன்ற கடுமையான சிக்கல் நிலை காணப்பட்டன. தரம் குறைந்த மருந்துகளால் பலரின் உயிர்கள் பறிபேனது. இன்றும் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு அரசாங்கத்திடம் தீர்வில்லை. இதற்கான ஏற்பாடுகள் கூட காண்பதற்கில்லை. ஆஸ்துமா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் மருந்து, நுரையீரல் தொற்றுக்கு வழங்கப்படும் மருந்து, நிமோனியா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும் பாக்டீரியா தொற்றுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றன. ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் மக்கள் ஆணையை வழங்கி, 225 பேரில் 159 பேரோடு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியது இவ்வாறான மருந்துகளுக்கு தட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்கல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார்.

மக்களின் உயிரைக் காப்பாற்றும் மருந்துப் பொருட்களுக்கு இவ்வாறு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் இவ்வேளையில், அரசாங்கமானது இது தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. வளமான நாட்டை உருவாக்குவோம் என்று கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தனர், ஆனால் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை க்கூட பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டை ஆள்வதற்கான தொலைநோக்குப் பார்வையோ, வேலைத்திட்டமோ, பாதை வரைபடமோ இந்த அரசாங்கத்திடம் இல்லை. நாட்டை நிர்வகிக்க முடியாத, இயலுமையற்ற அரசாங்கமே நாட்டில் காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

வேலையில்லாப் பட்டதாரிகள் வேலை கேட்கும் போது அரசாங்க அமைச்சர்கள் வேலையில்லா பட்டதாரிகளை கேலி செய்கிறார்கள். தற்போதைய அரசாங்கத்தின் வெற்றிக்கு உதவிய வேலையற்ற பட்டதாரிகள் இறுதியில் வைத்தியசாலை செல்லும் அளவிற்கு அரசாங்கத்தின் அடாவடித்தனம் முன்னெடுத்து வரப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *