ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் கற்பிட்டி ஓர் உயிர் நாடி; மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்
கற்பிட்டி பிரதேச சபை என்பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் முக்கியமானது என்பதுடன் புத்தளம் மாவட்டத்தில் ஓர் உயிர் நாடியாக உள்ள ஒரு பிரதேசம் கற்பிட்டி என்பதன் அடிப்படையில் கற்பிட்டிக்கு விஜயம் செய்ததாக ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள சபைகளுக்கான இறுதிக் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை நிறைவு செய்யும் நோக்கோடு கற்பிட்டி ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச்.எம் ஹில்மி தலைமையில் கற்பிட்டி பிரதேச சபையின் தலைமை வேட்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மிலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கட்சிப் போராளிகளுடனான விஷேட சந்திப்பில் உரையாற்றும் போதே றவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் தொடர்ந்து தெரிவித்ததாவது; புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது முன்னாள் நகர பிதா மர்ஹூம் கே.ஏ பாயிஸின் அகால மறைவிற்குப் பின்னர் சந்திக்கும் முக்கியமான ஒரு தேர்தலாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பார்க்கின்றது. என்ற காரணத்தினை முன்நிறுத்தி எனது இன்றைய கற்பிட்டி விஜயமும் கட்சி போராளிகளுடனான சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது .
அத்தோடு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் இருந்த காலம் தொட்டு கற்பிட்டி பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் செயற்பாடுகள் மேலோங்கியே காணப்படுகின்றது . மூத்த போராளிகளின் குடும்பங்களின் வாரிசுகள் கூட இம்முறை கற்பிட்டி பிரதேச சபை தேர்தலில் களம் இறங்கியுள்ளதையும் காணமுடிகிறது. எனவே இன்ஷாஅல்லாஹ் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடும் சகல சபைகளிலும் அதிக படியான ஆசனங்களை கைப்மற்றும் என்ற நம்பிக்கையும் இன்றைய சந்திப்பின் மூலம் வெளிப்படுவதாகவும் தெரிவித்தார் .
மேலும் இச் சந்திப்பில் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான எஸ்.எச்.எம் நியாஸ் , மற்றுமொரு உயர் பீட உறுப்பினர் பைறூஸ், புத்தளம் மாநகர சபை வேட்பாளர் றனீஸ் பதுயூதீன் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் புதிய வேட்பாளர்கள் ஏன பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



(எம்.எஸ்.எம். ஸகீர்)