பரீட்சை காலத்தில் ஜும்ஆ நேரத்தை சுருக்குதல், ஒலிபெருக்கி பாவனையை நிறுத்துதல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை (2024) 2025 காலத்தில் ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வதும் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்திக் கொள்வதும் தொடர்பாகவும் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் சகல பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் சுற்று நிருபம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் நுனு/09/55/02/08 (i) ஆம் இலக்க 2025.03.17ஆம் திகதிய கடிதம் மூலம் எதிர் வரும் 2025.03.17 ஆம் திகதி தொடக்கம் 2025.03.26 ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை (2024) 2025 நடைபெற இருப்பதாக பரீட்சை ஆணையாளர் அறிவித்திருப்பதாக திணைக்களத்திற்கு கல்வி அமைச்சு எழுத்து மூலமாக அறிவித்துள்ளது.
எனவே மேற்படி அறிவுறுத்தல்களுக்கு அமைய 2025.03.17ஆம் திகதி தொடக்கம் 2025.03.26 ஆம் திகதி வரை நடைபெற இருக்கும் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆப் பிரசங்கத்தை பிற்பகல் 1.00 மணிக்கு முன்னதாக சுருக்கிக் கொள்வதுடன் பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் இருக்கும் பள்ளிவாசல்களில் பரீட்சை நடைபெறும் நேரங்களில் குறிப்பாக ளுஹர், அஸர் நேரங்களில் வெளி ஒலிபெருக்கிப் பாவனைகளை நிறுத்தி உள்ளக ஒலிபெருக்கியை மட்டும் பாவித்து மாணவர்கள் பரீட்சைகளை சிரமமின்றி எழுதுவதற்கு உதவுமாறும் தங்களது கதீப்மார்களுக்கும், முஅத்தின்மார்களுக்கும் ஆலோசனை வழங்குமாறும் பணிப்பாளர் அந்த சுற்று நிருகத்தில் கேட்டுள்ளார்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)