விளையாட்டு

இலங்கை உலகச் சம்பியன் மகுடம் சூடி இன்றுடன் 29 வருடங்கள் பூர்த்தி

இலங்கை அணி, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் (17) 29 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி நடைபெற்றது.

அர்ஜூன ரணதுங்கவின் தலைமையிலான இலங்கை குழாமில் அரவிந்த டி சில்வா, ரொமெஷ் களுவித்தாரன, அசங்க குருசிங்க, ரொஷான் மஹானாம, ஹஷான் திலகரத்ன, குமார் தர்மசேன, சமிந்த வாஸ் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வெற்றிகொண்ட இலங்கை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பாகிஸ்தானின் லாஹூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி லாகூர் கடாஃபி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் சார்பில் டெய்லர் 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அரவிந்தடி சில்வா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில் 242 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 23 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்தைச் சந்தித்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த குருசிங்க மற்றும் அரவிந்தடி சில்வா மூன்றாவது விக்கெட்டுக்காக 125 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அரவிந்தடி சில்வா மற்றும் அர்ஜூன ரணதுங்க இறுதி வரை ஆட்டமிழக்காது முறையே 107 மற்றும் 47 ஓட்டங்களைக் குவித்தனர்.

இறுதியில் 46.2 ஆவது ஓவரில் ரணதுங்க 4 ஓட்டங்களைப் பெற இலங்கை அணியின் வெற்றி உறுதியானது. இதற்கமைய 29 வருடங்களுக்கு முன்னர் இதே போன்றதொரு நாளில், பலம் பொருந்திய அவுஸ்திரேலிய அணியை 07 விக்கெட்களால் வெற்றி கொண்டு இலங்கை அணி உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *