நாளைய தினம் பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆய்வுப்பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சென்றனர்.
அவர்கள் 10 நாட்கள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பூமிக்கு திரும்ப முடியவில்லை.
இதையடுத்து 9 மாதங்களுக்குப்பிறகு இருவரையும் மீட்டு கொண்டு வர ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் நேற்று முன்தினம் (15) அதிகாலை பால்கன்-9 ரொக்கெட்டில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் நேற்று (16) அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. அதில் இருந்து விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர்.
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் 18ஆம் திகதி பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
இதேவேளையில் வானிலை இடையூறு ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.