உள்நாடு

“ஹெட ஓயா” திட்டத்தினை பூர்த்தி செய்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவுங்கள்; பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை

கடந்த அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ள “ஹெட ஓயா” நீர்ப்பாசனத் திட்டத்தினை பூர்த்தி செய்து அம்பாறை, மொனராகலை மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி புரியுங்கள் என விவசாய, நீர்ப்பாசன, காணி, கால்நடை அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த அரசாங்க காலத்தில் நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ அமைச்சினால் “ஹெட ஓயா” நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் தொடர்பான புவியியல் கள ஆய்வு மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகளைப் பெற்ற நிலையில் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை நிறைவு செய்யுமாறு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி “ஹெட ஓயா” நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பாக தீர்மானம் எடுப்பதாக தீர்மானம் எடுத்தோம். கௌரவ பிரதி அமைச்சர் வசந்த பீரிஸ் அவர்களும் இது தொடர்பான விடயங்களில் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தார்.

எனவே, கௌரவ நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த் அவர்கள் அம்பாறை, மொனராகலை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து “ஹெட ஓயா” நீர்ப்பாசனத் திட்டத்தினை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட மக்கள் சார்பில் கேட்டுக்கொண்டார்.

இத்திட்டம் பூர்த்தி அடைந்தால் லகுகல, சியம்பாலாண்டுவ பிரதேசங்களும் பொருளாதார வளர்ச்சியடையும் எனத் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் வசந்த பீரிஸ் பதிலளிக்கையில், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், மொனராகலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் “ஹெட ஓயா” திட்டத்தினை பூர்த்தி செய்வதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதால் விரைவில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

கல்லோயா நீர்ப்பாசனத் திட்டத்தினால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலக பிரிவில் உச்சகட்ட நெல் விளைச்சலினை வழங்கி வந்த 8500 ஏக்கர் காணிகள் நீண்ட காலமாக நீரில் மூழ்கி கிடக்கின்றன.

எனவே, தில்லையாறு, சம்புக்களப்பு திட்டத்தினை மேற்கொள்வதற்கான விசேட ஏற்பாடுகளை நீர்ப்பாசன அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.

தில்லையாறு, சம்புக்களப்பு திட்டத்திற்காக உலக வங்கித் திட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 30 மில்லியன் நிதி செலுத்தப்பட்டும் இதுவரையும் நீர்ப்பாசனத் திணைக்களம் அந்நிதியை பயன்படுத்தி தில்லையாறு சம்புக்களப்பு ஆழமாக்கும் திட்டத்தினை நிறைவேற்றவில்லை.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்கள்,பிரதேச சபை செயலாளர்கள், விவசாய அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாரான நிலையிலும் நீர்ப்பாசனத் திணைக்களம் இந்த விடயத்தினை இழுத்தடிப்பு செய்து வருகின்றது.

இதனால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் வெள்ளம் நிலவும் காலங்களில் நஷ்டமடைந்து வருகின்றனர்.

எனவே, தில்லையாறு, சம்புக்களப்பு திட்டத்திற்கு உலக வங்கியினால் ஒதுக்கப்பட்ட நிதியினை பயன்படுத்தும் நடவடிக்கையினை நீர்ப்பாசன அமைச்சு மேற்கொள்ள வேண்டும்.

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான தீகவாபி கழியோடை பிரதான வாய்க்கால் நான்கு கிலோமீட்டர் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமலிருப்பதால் ஒவ்வொரு வெள்ள காலத்திலும் ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான நெற் காணிகள் நஷ்டமடைந்து வருகின்றன.

வெள்ள காலத்தில் கழியோடை பிரதான வாய்க்கால் உடைந்து போவதும், நீர்ப்பாசனத் திணைக்களம் தற்காலிகமான ஏற்பாடுகளை செய்வதுமாக கழியோடையின் நான்கு கிலோமீட்டர் பிரதான வாய்க்காலின் நிலைமை உள்ளது. இதனால் கோடிக்கணக்கான நஷ்டங்கள் பிரதேச விவசாயிகளுக்கு ஏற்படுவதுடன், அரசாங்க நிதியும் ஒவ்வொரு வெள்ள காலத்திலும் வீணாக செலவு செய்யும் நிலைமை தொடர்கின்றது.

எனவே, தீகவாபி கழியோடை நான்கு கிலோமீட்டர் பிரதான வாய்க்காலுக்கான நிரந்தர தீர்வை நீர்ப்பாசன அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் சார்பில் கேட்டுக்கொண்டார்.

இதே நிலைமைதான் இறக்காமம் பிரதேச செயலாளார் பிரிவில் அமைந்துள்ள நெய்னாகாடு (ஆஸ்பத்திரி சேனை வட்ட) RB பிரதான வாய்க்கால் ஒவ்வொரு வருடத்திலும் உடைந்து போவதால் சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேச மக்களின் ஆயிரக்கணக்கான நெற் காணிகள் நஷ்டமடைவதுடன், சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 42 ஆயிரம் பேருக்கான நீர் இணைப்புக்களும் அடிக்கடி துண்டிக்கப்படுகின்றன.

எனவே, இதற்கான நிரந்தர தீர்வினையும் நீர்ப்பாசன அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

(கே. எ. ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *