உள்நாடு

அர்ச்சுனா எம்.பீ.யின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டணம்

2025.03.08 ஆம் தேதி, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Dr. ராமநாதன் அர்ச்சுனா தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பில் அறிவீனமாக கருத்து வெளியிட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாக கண்டிக்கின்றது.

மார்க்க விவகாரங்கள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்து போதிய அறிவின்றி கருத்து வெளியிடுவது, சமூகங்களிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி, குறிப்பிட்ட நம்பிக்கைகளை பின்பற்றி வாழும் சமூகத்தின் மத உணர்வுகளை தூண்டும் நிலையை உருவாக்கக் கூடும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில், மார்க்க அடிப்படைகளுக்கு முரணில்லாத வகையில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறான மத சார்ந்த முக்கியமான விடயங்கள் தொடர்பாக பொது மன்றங்களில் கருத்து வெளியிடும் போது, மிகுந்த நாகரிகத்தோடும், தெளிவோடும், பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் நடந்து கொள்வதே மிகவும் சிறந்ததாகும்.

Dr. அர்ச்சுனா உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மதங்கள் பற்றிய முக்கியமான விடயங்களில் தேவைப்படுமாயின் அவற்றை பேசுமுன், அந்தந்த மதங்களின் உயர்பீடங்களிடம் தெளிவு பெற்ற பின்னரே கருத்து தெரிவிப்பது முறையாகும்.

அவ்வாறே இஸ்லாத்தை பற்றிய தெளிவுகள் தேவைப்படுமாயின், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் தொடர்பு கொண்டு, முறையாக தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *