நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் கிண்ணத்தின் மகுடத்தினை உச்சி முகர்ந்த ரோஹித் படை
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இந்தியா. கேப்டன் ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக பேட் செய்தனர். இந்திய அணியின் வெற்றி ரன்களை ஜடேஜா எடுத்துக் கொடுத்தார்.
துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 252 ரன்கள் என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் துணை கேப்டன் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்தது இந்தியா. ரோஹித் அதிரடியாக ஆடி அசத்தினார். நிதானமாக இன்னிங்ஸை அணுகினார் கில். 18 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.
அந்த நிலையில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் வீசிய 19-வது ஓவரில் கவர் திசையில் ஷாட் ஆட முயன்றார் கில். ஆனால், கிளென் பிலிப்ஸ் அதை அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார். கில், 50 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிரேஸ்வெல் வீசிய அடுத்த ஓவரில் கோலி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்தியா ரிவ்யூ எடுக்க அது வீண் ஆனது. கோலி ஒரே ரன்னில் அவுட்.
ரச்சின் ரவீந்திரா வீசிய 27-வது ஓவரில் பெரிய ஷாட் ஆட முயன்று பந்தை மிஸ் செய்தார் ரோஹித். அதை பற்றிய நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் லேதம் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார். ரோஹித் 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தார். 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.
அதன் பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் பொறுப்புடன் ஆடினர். இருவரும் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மீண்டும் சான்ட்னர் பந்து வீச வந்ததும் ஸ்ரேயாஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்ரேயாஸ் 62 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். அக்சர் படேல் 29 ரன்களில் வெளியேறினார்.
கடைசி 5 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தனர். இந்திய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜேமிசன் வீசிய 48-வது ஓவரில் 18 ரன்களில் ஹர்திக் அவுட் ஆனார். தொடர்ந்து ஜடேஜா காலத்துக்கு வந்தார். 12 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது.
49-வது ஓவரில் 9 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. ராகுல் 33 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 5 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தின. சில கேட்ச் வாய்ப்புகளை நியூஸிலாந்து அணியும் நழுவ விட்டது.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணிக்காக ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் 5 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. இன்னிங்ஸின் முதல் மூன்று ஓவர்களில் வெறும் 10 ரன்கள் தான் எடுத்திருந்தது நியூஸி. அதற்கடுத்த இரண்டு ஓவர்களில் வேக வேகமாக ரன் குவித்தார் ரச்சின். உடனடியாக வருண் சக்கரவர்த்தியை பந்து வீச செய்தார் கேப்டன் ரோஹித். அதற்கான பலனாக 8-வது ஓவரில் வில் யங் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார் வருண். அந்த விக்கெட் இந்திய அணிக்கு அவசியமானதாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பு ரச்சின் கொடுத்த 2 கேட்ச் வாய்ப்பை இந்தியா நழுவ விட்டது.
11-வது ஓவரை குல்தீப் வீசினார். முதல் பந்தில் ரச்சின் ரவீந்திராவை போல்ட் செய்தார். அதற்கடுத்து அவர் வீசிய 13-வது ஓவரில் கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்ச்சை அவரே பிடித்து வெளியேற்றினார். அதன் பின்னர் நியூஸிலாந்து அணியின் மிட்செல் மற்றும் டாம் லேதம் இணைந்து மிகவும் நிதானமாக இன்னிங்ஸை அணுகினர். பவுண்டரி அடிக்க முடியாத காரணத்தால் அவர்கள் மீது அழுத்தம் கூடியது. அதோடு ஸ்பின் ஆப்ஷனை வைத்து மேலும் நெருக்கடி கொடுத்தார் ரோஹித்.
24-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் லேதமை ஜடேஜா வெளியேற்றினார். அதிரடியாக ஆடி ரன் குவிக்கும் கிளென் பிலிப்ஸ் 52 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வருண் பந்துவீச்சில் போல்ட் ஆனார். 38 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து. அந்த அணிக்கு களத்தில் நம்பிக்கை தந்த இருவரில் மிட்செல் ஒருவராக திகழ்ந்தார். அரை சதம் பதிவு செய்ய 91 பந்துகள் எடுத்துக் கொண்டார். அவர் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி வேகத்தில் விக்கெட்டை இழந்தார். சான்ட்னரை கோலி ரன் அவுட் செய்தார்.
50 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீச வரும் போதெல்லாம் அதை நியூஸிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். 40 பந்துகளில் 53 ரன்களை அவர் எடுத்தார். 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.
இந்திய அணியின் பவுலர்கள் தரப்பில் வருண் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா மற்றும் ஷமி தலா 1 விக்கெட் கைப்பற்றினார். இருப்பினும் 9 ஓவர்களில் 74 ரன்களை கொடுத்திருந்தார் ஷமி. ஓவருக்கு 3 ரன்கள் என்ற எகானமயில் 10 ஓவர்களை பூர்த்தி செய்தார் ஜடேஜா. வருண், குல்தீப் மற்றும் அக்சர் ஆகியோரின் பவுலிங் எகானமியும் சிறப்பாக இருந்தது.
12 வருடங்களுக்கு பிறகு: இந்தியா இதற்கு முன்னர் 2002 (கேப்டன் கங்குலி) மற்றும் 2013 (கேப்டன் தோனி) ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த நிலையில் 12 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றுள்ளது இந்தியா. இரண்டு முறை இறுதிப் போட்டியில் (2000, 2017) ஆடி உள்ளது.
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. குரூப் சுற்றில் மூன்று போட்டி, ஆஸ்திரேலியாவுடன் அரை இறுதி, நியூஸிலாந்து உடன் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அணியினர் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி மூன்று போட்டிகளில் விளையாட கிடைத்த வாய்ப்பை வருண் சக்கரவர்த்தி சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)