விமர்சையாக இடம்பெற்ற JMJ Media வின் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்
உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு ஜே.எம்.ஜே மீடியாவினால் “பெண்களைப் போற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் உலகின் பல பாகங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நேற்று (8) மிகக் கோலாகலமாக இடம்பெற்றன.
உலகத்தின் பல நாடுகளில் தமது ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் குறிப்பாக உலகம் கொண்டாடுகின்ற சிறப்பு மிக்க தினங்களை முன்னிட்டு அது சார்ந்த செயல்திட்டங்களை வெற்றிகரமாக ஜே.எம்.ஜே மீடியா செயல்படுத்தி வருகின்றது.
அந்தவகையில் ஜே.எம்.ஜே மீடியா நிறுவனத்தினால் இன்றைய தினமான மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒவ்வொரு ஆணின் தாயாய், தாரமாய், சகோதரியாய் மற்றும் நண்பியாய் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களை சுமந்து கொண்டுள்ள பெண்களுக்கான தினமான உலக மகளிர் தினத்தினை உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் அதன் பணிப்பாளர் ஜஸூரா ஜலீல் இன் தலைமையில் இன்றைய தினம் மிகச் சிறப்பாக நடாத்தி முடிந்திருந்தது.
இதில் ஜே.எம்.ஜே மீடியாவின் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியர் குழாத்தின் மூலம் எதிர்காலத் தலைவர்களான பாடசாலை மாணவர்களுக்கும் , தனியார் வகுப்பு மாணவர்களுக்கும் “பெண்களை போற்றுவோம்” எனும் தலைப்பில் கருத்தரங்குகள் இடம்பெற்றன. மேலும் எவ்வாறு எம் சமூகத்தில் பெண்கள் மதிக்கப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் தொடர்பிலும் மேடை நாடகங்களும் இடம்பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது .
அத்துடன், பெண்களைப் போற்றுவோம் எனும் தலைப்பிலான பேச்சுப் போட்டிகளும் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வுகளில் இன்று வரைக்கும் உலக மக்களுக்காக தம்மையே அர்ப்பணித்து சேவைகளைச் செய்து சரித்திரத்தில் இடம்பிடித்த சாதனைப் பெண்களின் வேடமணிந்து சின்னஞ்சிறார்கள் மேடைகளில் தோன்றியமை இந்நிகழ்வை மென்மேலும் உணர்வு பொங்கச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

