முஸ்லிம் சேவை நேரம் குறைப்பு; ஆளுனருக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிய கூட்டுத்தாபன பணிப்பாளர், பல தரப்பிலும் அதிருப்தி
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நேரமாற்றம் குறித்து மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபிற்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் அளித்த வாக்குறுதி மீறப்பட்டது குறித்து பலத்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. புனித ரமழான் மாதத்தில் இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை முஸ்லிம் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுவது நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இம்முறை திடீரென கடந்த நான்காம் திகதி முதல் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு விளம்பரங்கள் ஒலிபரப்பப்படுவது குறித்து முஸ்லிம் தரப்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபின் கவனத்திற்கு கொண்டு வந்ததனையடுத்து ஆளுநர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் தமிந்த குமாரவுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தெரிவித்த போது வழமை போன்று நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும் என தெரிவித்தார். ஆளுனருக்கும் அதேபோல முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருக்கும் இந்த வாக்குறுதி தெரிவிக்கப்பட்டது. ஆளுநருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாதது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. இதுகுறித்து பணிப்பாளர் நாயகம் ஆளுநருக்கு குறிப்பொன்றை அனுப்பி வைத்துள்ளார். முஸ்லிம் மீடியா போரத்தின் நேரமாற்ற கோரிக்கையை நிறைவேற்ற முடியாததை குறித்து நான் ஆழ்ந்த கவலைப்படுகின்றேன். பின்வரும் காரணிகளினால் மீடியாவின் போரத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கின்றேன். இந்த முஸ்லிம் நிகழ்ச்சி தமிழ் சேவையில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒலிபரப்பப்படுகின்றது.
முஸ்லிம் சமூகத்தின் வேண்டுகோளின் பெயரில் 7 மணி முதல் 8 மணி வரை அது ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழமையாக செய்தி அறிக்கை 6 மணிக்கு ஒலிபரப்பப்படுகின்றது. பள்ளிவாசல்களின் வேண்டுகோளின் பேரில் இப்தார் நிகழ்ச்சி அந்த நேரத்தில் ஒலிபரப்பப்படுவதனால் செய்தி அறிக்கை ஏழு மணிக்கு ஒலிபரப்பப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் 7 மணி முதல் 7.10 வரை செய்தி அறிக்கை ஒளிபரப்பாகின்றது. எனவே ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு இரவு 7 மணி முதல் 7.10 வரையான நேரத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்க முடியாது. பள்ளிவாசலில் வேண்டுகோளின் படியே இந்த மாற்றம் இப்தார் நிகழ்ச்சிக்கு முன்னுரிமை வழங்கி மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த மாற்றங்களை அறிமுகப்படுத்த முடியாத நிலையில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இருக்கின்றது. அடுத்த முறை இந்த மாற்றங்களை மேற்கொள்ளும் சாத்தியப்பாடுகள் பற்றி கவனத்தில் கொள்வோம். இது குறித்து ஆளுநருக்கு முஸ்லிம் மீடியா போரத்திற்கும் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு கவலை தெரிவிக்கின்றேன் என்று பணிப்பாளர் நாயகம் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார். அதேநேரம் முஸ்லிம் மீடியா போரம் இதுகுறித்து அமைச்சர் விமல் ரத்னாயக்க வின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன் கொழும்பில் இடம்பெற்ற சவூதி அரேபியாவின் இப்தார் நிகழ்வின் போது முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் இது குறித்து ஊடக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார்.