சம்பியன் கிண்ண மகுடத்தை தனதாக்கப்போவது இந்தியாவா? நியூசிலாந்தா? இன்று பலப்பரீட்சை
9ஆவது சம்பியன் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று 9ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் மோத உள்ளன.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஏற்பாட்டில் 9 ஆவது சம்பியன் கிண்ணத் தொடரை பாகிஸ்தான் நடாத்திவருகின்றது. இதில் பாகிஸ்தானின் எதிரி நாடாகப் பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்தமையால் இந்திய அணி பங்கேற்ற போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச மைதானத்திலே இடம்பெற்று வந்தன. அந்தவகையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமையால் இறுதிப் போட்டியும் துபாயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் சம்பியன் கிண்ணத் தொடரில் கடந்த 2024 இல் அணிகளின் தரப்படுத்தலில் முதல் 8 இடங்களைப் பெற்ற அணிகளே இதில் பங்கேற்றிருந்தன. அதன் காரணமாக இலங்கை மற்றும் மேற்கத்திய தீவுகள் ஆகிய அணிகள் இதில் பங்கேற்கவில்லை.
மேலும் குழு நிலை லீக் சுற்று முடிவில் குழு ஏ இல் முதலிடம் பெற்ற இந்திய அணி குழு பி இல் 2ஆம் இடம் பெற்ற அவுஸ்திரேலிய அணியை அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் குழு பி இல் முதலிடம் பெற்ற தென்னாபிரிக்க அணியை , குழு ஏ இல் 2ஆம் இடம் பிடித்த நியூசிலாந்து அணி வென்று மீண்டும் இறுதிப் போட்டியில் தடம் பதித்தது.
அத்துடன் இந்த தொடரில் இந்திய அணி தான் பங்கேற்ற போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இறுதிக்குள் நுழைந்திருக்க, மறுபுறம் நியூசிலாந்து அணி லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக 50 ஓட்டங்களால் தோல்வி அடைந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் இரு அணிகளும் மோதிக்கொள்ளும் தீர்மாணமிக்க இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை 9ஆம் திகதி துபாயில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)