சம்பியன் கிண்ண இறுதிப் போட்டி; முதலில் துடுப்பெடுத்தாடுகிறது நியூசிலாந்து
9ஆவது சம்பியன் கிண்ணத் தொடரில் தீர்மானிக்க இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் தலைவரான இல் ஷோதி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் சம்பியன் கிண்ண தொடரின் இறுதிபோட்டிக்கு இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்துகின்றன. இப்போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகின்றது.
அதற்கமைய இடம்பெற்று முடிந்த நாணயச் சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடப் போவதாக அறிவித்துள்ளது. மேலும் நியூசிலாந்து அணி சார்பில் இவ் சம்பியன் கிண்ணத் தொடரில் பந்துவீச்சில் அசத்திவரும் வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றி உபாதை காரணமாக இவ் இறுதிப் போட்டியில் இடம்பெற வில்லை. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஸ்மித் இணைக்கப்பட்டுள்ளார். மேலும் ஹென்றி இன்றைய போட்டியில் இல்லாமை நியூசிலாந்து அணிக்கு மிகப் பெரிய பலவீனம் எனலாம்.
இந்திய அணியைப் பெறுத்த வரையில் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்ற அதே பதினொரு வீரர்களே இன்றைய இறுதிப் போட்டியிலும் பங்கேற்க உள்ளனர். மேலும் இத் தீர்மானிக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரிச்சின் ரவீந்திர மற்றும் கேன் வில்லியம்ஸன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் கை கொடுத்தால் மாத்திரமே இச் சம்பியன் கிண்ணத் தொடரில் மகுடம் நியூஸிலாந்து அணி வசமாகும் எனலாம்.
(அரபாத் பஹர்தீன்)