தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு கடத்த முயன்ற இந்திய ரூபா 80 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு சிறிய ரக கப்பலில் கடத்த முயன்ற இந்திய ரூபாய் 80 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இது தொடா்பாக 11 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு சிறிய ரக கப்பல் போதைப் பொருள்கள் கடத்துவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், தூத்துக்குடி துறைமுகத்தில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிறிய ரக கப்பலை நடுக்கடலில் வைத்து சோதனை நடத்தினர். அதில் போதைப்பொருள்கள் இருந்தது கண்டறிந்தனர். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
அது போதைப் பொருளான செறிவூட்டப்பட்ட கஞ்சா ஜெல் (ஹஷிஸ்) என ஆய்வில் தெரியவந்தது. தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கப்பலில் இருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 2 பேர் உள்பட 11 பேரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் துறைமுக பணியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 30 கிலோ கஞ்சா ஜெல்லின் சா்வதேச மதிப்பு இந்திய ரூபாயில் 80 கோடி இருக்கும் என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)