சமூகத்தின் இயக்க நாடியாகவும்,உயிர் நாடியாகவும் பெண்கள் விளங்குகின்றனர்; மகளிர் தின வாழ்த்தில் சஜித் பிரேமதாச
ஒரு தாய், மனைவி, சகோதரி, மகள் மற்றும் நண்பி போன்ற பல்வேறு வகிபாகங்களின் பிரதிநிதியாக இருக்கும் பெண், ஒரு நாட்டின், சமூகத்தின் முக்கிய இயக்க சக்தியாகவும் உயிர்நாடியாகவும் இருக்கிறார்.
சூரியன் உதிப்பதற்கு முன்பே விழித்தெழும் அவர், நள்ளிரவு வரை தனது குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் செய்யும் அந்த மகத்தான சேவையை விலைமதிப்பிட முடியாது.
எமது நாட்டின் முக்கிய உயிர்நாடியாக இருப்பது பெண்ணே. பாரம்பரிய வகிபாகங்களை மறந்து, அறிவால், திறமையால், நிபுணத்துவத்தால் நாட்டிற்கு சேவை செய்யும் அவர், நாட்டிற்கு டொலர் ஈட்டித்தரும் ஆடை தொழிற்சாலையில் இருந்து பெரிய, நடுத்தர மற்றும் சிறு தொழில்முனைவோர் வரை ஆண்களுக்கு சளைக்காத பெரும் பங்களிப்பை வழங்குகிறார்.
நாட்டிற்காக, சமூகத்திற்காக, குடும்பத்திற்காக அவர் காட்டும் அந்த அசைக்க முடியாத தைரியத்திற்கு உரிய மதிப்பையும் இடத்தையும் வழங்குவது நம் அனைவரின் பொறுப்பும் கடமையுமாகும்.
இதன்போது பெண்ணின் திறமைகளுக்கும் ஆற்றலுக்கும் தகுந்த இடமளித்து, வீட்டிலும், வெளியிலும், தொழில் புரியும் இடத்திலும் அவரைப் பாதுகாத்து, அவரது உரிமைகளை நிலைநிறுத்தி, நாட்டிற்கு அவர் ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்ற தேவையான வழிகளை திறந்துவிட வேண்டும்.
தலைமைப் பொறுப்பில் இருந்து கொள்கை வகுப்பு வரை மற்றும் அதற்கு அப்பாலும் பெண்களை வலுவூட்டுவது நம் அனைவரின் பொறுப்பாகும்.
“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்..” என்ற தொனிப்பொருளுடன் இந்த ஆண்டு மகளிர் தினத்தைக் கொண்டாடும் நாம், இதை வெறும் வார்த்தைகளுக்கோ அல்லது தொனிப்பொருளுக்கோ மட்டுப்படுத்தாமல், வார்த்தையின் முழு அர்த்தத்தையும் நடைமுறைப்படுத்துவது நமது கடமையும் பொறுப்புமாகும்.
இந்த உயரிய பொறுப்பிற்காக எந்த நேரத்திலும் தேவையான பங்களிப்பையும் உந்து சக்தியையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
வலுவூட்டப்பட்ட பெண்களால் நிறைந்த அழகான இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.
சஜித் பிரேமதாச
இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்.