உள்நாடு

கொரோனா காலத்தில் எரிக்கப்பட்டவர்களின் விபரங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போது, அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கொரோனா காலத்தில் எரிக்கப்பட்டவர்களின் விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சரான தங்களிடம் எங்களின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்
கேட்டுக் கொண்டார்.

ஆனால், இதுவரையும் கொரோனா காலத்தில் எரிக்கப்பட்டவர்களின் விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் உள்ளீர்கள். கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்கள் உங்களுடைய ஆட்சிக் காலத்தில் நடைபெறவில்லை எனவும், முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக இன்றைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா அன்று எங்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது எங்களுக்காக குரல் கொடுத்தார் என்பதனை நினைவூட்ட விரும்புகிறேன்.

நிலைமை இப்படி இருக்க, ஏன் நீங்க இதுவரையும் எரிக்கப்பட்டவர்களின் விபரங்களை சமர்ப்பிக்காமல் உள்ளீர்கள் ? இந்த விடயத்தில் எமது முஸ்லிம் சமூகம் மிகவும் கவலை அடைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ விரைவில் கொரோனா காலத்தில் எரிக்கப்பட்டவர்களின் விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவித்தார்.

பொத்துவில் தள வைத்தியசாலையில் நிலவுகின்ற ஆளணிகள் நிரப்பப்படாமல் உள்ளதால் பொத்துவில், லகுகல, பாணம, கோமாரி ஆகிய பிரதேசங்களில் வாழும் மூவின மக்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதுடன், உல்லாசத் துறைக்கு மிக முக்கியமான பிரதேசமாக அமைந்துள்ள பொத்துவில் தள வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையினை உடன் நிரப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், வைத்திய அதிகாரிகள் வெற்றிடம் 22, விசேட வைத்திய நிபுணர்கள் 03, பல் வைத்திய நிபுணர் 01, மருத்துவ தாதிகள் 44, கணக்காளர் 01, நிர்வாக உத்தியோகத்தர் 01 உட்பட பல ஆளணிகள் வெற்றிடமாக உள்ள விபரங்களை சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கையளித்தார்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜெயசிங்க பதிலளிக்கையில்,

பொத்துவில் தள வைத்தியசாலையில் நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

பாலமுனை வைத்தியசாலையினை அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் ENT பிரிவை அமைப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பரிந்துரை செய்யப்பட்டும் இதுவரையும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதால் இது தொடர்பான செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் 2024 நவம்பர் மாதத்தில் இருந்து Imipramine மாத்திரை அரசாங்க வைத்தியசாலைகளில் சிலவற்றில் மட்டுமே உள்ளது. வெளியார் மருந்தகங்களில் இம் மாத்திரை இல்லாமல் இருப்பதோடு , நோயாளிகள் பலர் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர் எனவும், இம்மாத்திரையினை பாவிக்கும் நோயாளர்களுக்கு நோய் தீவிரம் அடைந்து வேறு மட்டங்களுக்கு இந்த நோய் செல்லக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளது.

எனவே குறிப்பிட்ட மாத்திரையினை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும் தனியார் மருந்தகங்களிலும் மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் மனுஷ வீர்சிங்க கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பிட்ட மாத்திரை தட்டுப்பாடு நிலவுவதாகவும், இன்னும் ஒன்றரை மாதங்களில் மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

(கே.எ. ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *