உள்நாடு

ஆர்.ஜே. மீடியாவின் ஐந்து வருடப் பூர்த்தியும் மகுட விருது வழங்கல் விழாவும்

“முயற்சிக்கு என்றும் முதலிடம்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு பல சேவைகளை நாடளாவிய ரீதியில் வழங்கி வரும் ஆர்.ஜே.மீடியா ஊடக வலையமைப்பின் ஐந்து வருடப் பூர்த்தி மற்றும் மகுட விருது வழங்கல் விழா, ஆர்.ஜே. மீடியா வலையமைப்பின் பணிப்பாளரும், சமூகப்பணி இளம் கலைமாணியும் மற்றும் வானொலி அறிவிப்பாளருமாகிய ஏ. எம். இன்சாப் அவர்களின் தலைமையில் கொழும்பு டவர் மண்டபத்தில் அண்மையில் மிகப் பிரம்மாண்டமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். எம்.எம். பாஸில், கௌரவ அதிதிகளாக, சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தேசபந்து. எஸ்.எல். மொஹம்மது ஹனீபா, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன ஒன்றியத்தின் தலைவரும், சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளருமான உமர்லெப்பை யாகூப், சமூகப் பணி மற்றும் தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் வி. ஜெயரூபன், சிரேஷ்ட உளவியல் ஆலோசகரும், மனநல தத்துவ ஆரோக்கியத்தின் தலைவரும் மற்றும் தேசிய சமூகப்பணி நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குனருமான அஸ்மியாஸ் ஷஹீத், சிரேஷ்ட ஊடகவியலாளரும், தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான சிவா ராமஸாமி, சிரேஷ்ட ஊடகவியலாளரும், கெப்பிட்டல் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் பொது மேலாளருமான சியாஉல் ஹஸ்ஸன் மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தினுடைய விரிவுரையாளர் டாக்டர். ஸ்ரீபிரேந்ரன், சிரேஷ்ட ஊடகவியலாளரும், வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் முகாமையாளர் எம்.எஸ்.எம். இர்பான், சிரேஷ்ட ஊடகவியலாளரும், கெப்பிட்டல் வானொலியின் சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல். ஜபீர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன சிரேஷ்ட ஒளிபரப்பாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் இலங்கை ஒலிபரப்பாளர்கள் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளருமான இர்ஷாத் எ. காதர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவியுமான புர்கான் பீ இப்திகார், சிரேஷ்ட ஊடகவியலாளரான ஸமீஹா சபீர் மற்றும் ராம் குணா அழகுசாதன மையத்தின் இயக்குனரான குணரத்னம் ஹரிசான்த் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில், ஊடகம், கல்வி, கலை, இலக்கியம், சுகாதாரம், ஆன்மீகம், சமூக சேவை, சாதனையாளர், இளம் தொழில் முயற்சியாளர் மற்றும் அரச நிர்வாகத் துறை என்ற பத்துத் துறைகளிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மகுட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இதில் ஆர்.ஜே.மீடியாவின் இரண்டு மாத கால ஊடகப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான கௌரவிப்பு, ஆர்.ஜே. மீடியாவின் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு, ஆர்.ஜே. மீடியா உறுப்பினர்கள் கௌரவிப்பு மற்றும் அதிதிகள் கௌரவிப்பு என இந்நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில், பல நூற்றுக்கானவர்கள் கலந்து கொண்டமையும் சிறப்பம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *