புதிய கடவுச் சீட்டில் தவறுகள் மோசடிகள்;ஆராய தெரிவுக்குழு நியமிக்கவும்; பாராளுமன்றில் முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள்
தற்போது வழக்கிலுள்ள கடவுச் சீட்டுக்களை அச்சிடுவதில் இடம்பெற்றுள்ள மோசடிகள் மற்றும் அதிலுள்ள தவறுகள் பற்றி ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
பாதுகாப்பு அமைச்சின் நிதியொதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது புதிதாக அச்சிடப்பட்டுள்ள கடவுச் சீட்டில் பல்வேறு தவறுகள் இருக்கின்றன.இவ்வாறானதொரு நிலையில் இன்னும் பல இலட்சக்கணக்கான கடவுச் சீட்டுக்களை அச்சிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச தரத்துக்கு ஈடானதாக கடவுச் சீட்டுகள் அமைய வேண்டும்.ஆனால் இந்த கடவுச் சீட்டில் நிறைய தவறுகள் பிழைகள் இருக்கின்றன. தற்போதைய அரசாங்கம் ஐந்து மாத காலமாக பதவியிலிருந்தாலும் இது பற்றிஅவர்கள் கவனம் சேலுத்தாமல் இருப்பது கவலைக்குரியது.
இந்த நிலையில் இந்த மோசடிகள் குறித்து கண்டறிவதற்காகாகவும் பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.