2025 அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில் கொழும்பு கைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள் வெற்றி!
ரமழான் மாதத்தை முன்னிட்டு
Colombo Commodities நிறுவனம் வருடாந்தம் நாடளாவிய ரீதியில் நடத்திவரும் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சிகள் இம்முறை ஐந்தாவது வருடமாக கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இறுதிப் போட்டிகள் பெப்ரவரி 27ஆம் திகதி கொழும்பு 10 அல்ஹிதாயா கல்லூரி அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாடளாவிய ரீதியில் 60 பாடசாலைகள் பங்குபற்றின. அவற்றில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற கொழும்பு கைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கும் திஹாரிய அல்அஸ்ஹர் கல்லூரி மாணவர்களுக்குமிடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கொழும்பு கைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
இரண்டாம் இடத்தை திஹாரிய அல்அஸ்ஹர் கல்லூரி மாணவர்களும் மூன்றாம் இடத்தை ஹெம்மாதகம அல்அஸ்ஹர்கல்லூரி மாணவர்களும் பெற்றுக்கொண்டனர்.
முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டியமாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 60 ஆயிரம் ரூபாவும் வெற்றிக் கிண்ணமும் வெற்றிப் பதக்கமும் சான்றிதழும் பரிசுப் பொதியும் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 40 ஆயிரம் ரூபாவும் வெற்றிக் கிண்ணமும் வெற்றிப் பதக்கமும் சான்றிதழும் பரிசுப் பொதியும் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாவும் வெற்றிப் பதக்கமும் சான்றிதழும் பரிசுப் பொதியும் Colombo Commodities நிறுவன தலைவர் சமூக தீபம் அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக Colombo Commodities நிறுவனத்தின் தலைவர் சமூக தீபம் எம்.ஸி. பஹார்தீன் அவர்களும் விஷேட அதிதிகளாக நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஹாஜியானி திருமதி ஷஹ்ரியா பஹார்தீன், அல்ஹாஜ் பாஸித் பஹார்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





(அஷ்ரப் ஏ சமட் )