உள்நாடு

விவசாயிகளையும் அரச ஊழியர்களையும் ஏமாற்றிய ஆட்சியாளர்களின் கூட்டமே இன்று நாட்டை ஆள்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போது நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். விவசாயிக்கு உர மானியம் கூட உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. உயர்தர உரங்களைப் பயன்படுத்தும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு உத்தரவாத விலையும் நிர்ணயித்த பாடில்லை. கிலோவுக்கு ரூ.150 உத்தரவாத விலை தருவதாக கூறியவர்கள் அவற்றை மறந்து ரூ. 120 இல் திருப்தி அடைந்து கொள்ளுமாறு சொல்கிறார்கள். கடந்த காலங்களில் பல்வேறு அனர்த்தங்களினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்படாததால் எதிர்பார்த்த அறுவடை கிட்டவில்லை. எனவே, விவசாயிக்கு கூடிய தொகையிலமைந்த உத்தரவாத விலை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அறுவடைப் பணிகள் முடிவடைந்தாலும் உர மானியமோ, இழப்பீடோ இன்னும் வழங்கப்படவில்லை. விவசாயிகளை ஏமாற்றிய கூட்டமே இன்று நாட்டை ஆள்கிறது. இவ்வாறு வளமான நாட்டை உருவாக்க முடியாது, எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அநுராதபுரம் மதவாச்சிய பிரதேசத்தில் இன்று (27) மாலை இடம்பெற்க மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

🟩 அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர உதவிய சமூக ஊடக ஆர்வலர்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டு மக்கள் மீது வரி சுமத்தப்பட்டுள்ளது. இணையத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட ஏற்றுமதி சேவைகளுக்கு 15% வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க முடியாது. தங்கள் சொந்த திறமையால் பணம் சம்பாதிக்கும் யூடியூபர்களுக்கும், டிஜிட்டல் சேவைகளை வழங்கும் தரப்புகளுக்கும் வரி விதிப்பதன் மூலம் ஏற்றுமதியைக் குறைக்கும் திட்டத்தையே இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

🟩 உண்டியல் மற்றும் ஹவாலா மூலம் பணம் அனுப்புவதை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

இதன் மூலம் பணமோசடி முறைகள் மற்றும் சட்டவிரோத உண்டியல், ஹவாலா முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியின் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி இதற்கு எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சராக இந்த வரிகளை முன்மொழிந்ததாக தெரிவித்திருக்கிறார். தம்புத்தேகம புகையிரத நிலையத்தின் அபிவிருத்திக்காக 1000 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளமை கூட ஜனாதிபதிக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கமும் இந்த வரிகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்க முனையும். கடந்த காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் இத்துறையில் வருமானம் ஈட்டி வருவதால் இதனை அவர்கள் போராட்ட வரி என பெயர் வைத்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் இத்துறையில் வருமானம் ஈட்டி வருகின்றனர். தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிக்கு கொண்டுவர வழி வகுத்த போராட்டக்காரர்களுக்கு கூட வரி விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இதனைப் பேசப்போகும் போது சபாநாயகர் முட்டுக்கட்ட போடுகிறார். நாட்டின் பிரச்சினைகள் குறித்து பேசும் போது ஒலிவாங்கியை அணைப்பது நாட்டின் கொள்கையாக மாறி, பாராளுமன்றம் அரசாங்கத்தின் பேச்சுக் கூடமாக மாற்றப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 ஜே.வி.பி பேரணிகளுக்கு உத்தியோகபூர்வ உடையில் வந்த தாதியர்களும் இன்று வீதியில்…

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு பங்காற்றிய அரச ஊழியர்களும் மறக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு தடவையும் ரூ. 20,000 சம்பளத்தை அதிகரித்து தருவதாக வாக்குறுதியளித்தனர். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் இன்று தாதியர் பணிப் பகிஷ்கரிப்பும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தாதியர் மாநாட்டிற்கு உத்தியோகபூர்வ உடையில் வந்த தாதியர்களையும் நிர்க்கதி நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு ஆணையை வழங்கிய அரச ஊழியர் இன்று வீதிகளுக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *